‘இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு’ என்று நீட் தேர்வுக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கொதித்தெழுந்துள்ளார்.


நீட் தேர்வு அச்சத்தால் சேலம் மாவட்டத்தில் தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்த நிலையில், நீட் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற பதற்றத்தில் அரியலூரைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்தநிலையில், நீட் தேர்வுக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு. சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!' எனப்பதிவிட்டுள்ளார்.


கருணாநிதியின் அறிக்கை முதல் திமுக அரசு தீர்மானம் வரை... நீட் தேர்வும்... திமுகவும்!


 






 


மாணவி கனிமொழி தற்கொலை


அரியலூர் மாவட்டத்தில் உள்ளது துளாரங்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் கனிமொழி. இவர், நாமக்கல்லில் உள்ள பள்ளியில் படித்துள்ளார். கனிமொழி தனது 12-ஆம் வகுப்பில் 562.28 மதிப்பெண் பெற்று 93 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளார். மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில், அதற்காக கனிமொழி தயாராகி வந்துள்ளார். இந்த நிலையில், தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கனிமொழி நேற்று  நீட் தேர்வை எழுதினார்.


தேர்வு எழுதி முடித்த பிறகு, வீட்டிற்கு வந்த கனிமொழி தனது தந்தையுடன் இருந்துள்ளார். பின்னர், நேற்று மாலை யாரும் எதிர்பாராத விதமாக மாணவி கனிமொழி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு எழுதி வந்த பிறகு, நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் மாணவி கனிமொழி காணப்பட்டுள்ளார்.




அந்த பயத்தின் காரணமாகவே கனிமொழி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவ படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுதிவந்த மாணவி கனிமொழி, சடலமாக தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்ட அவரது பெற்றோர்கள் அதிர்ச்சியிலும், சோகத்தில் கதறி அழுதனர்.


பின்னர், உடனடியாக இந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக. வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கனிமொழியில் இறுதிச்சடங்கிற்காக அவரது உடல் சொந்த ஊரான சாத்தாம்பாடிக்கு கொண்டு செல்லப்பட்டது. நீட் தேர்வு தோல்வியால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவும் அரியலூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.