நாமக்கல் மாவட்டத்தில் கோயில் வளாகம் ஒன்றில் நந்தி சிலை ஒன்று தோண்டப்படும்போது, மண்ணுக்கு அடியில் கிடைத்ததை, மசூதி ஒன்றின் அடியில் தோண்டியபோது கிடைத்ததாக, வட இந்தியாவில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. `ஒவ்வொரு மசூதிக்கும் அடியில் புதைக்கப்பட்டிருக்கும் ரகசியம்’ என்று இந்தி மொழியில் எழுதப்பட்டிருக்கும் தொடருடன் இந்தப் படம் வைரலாகி வருகிறது. 


தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் கோயிலின் அடியில் தோண்டியபோது, இந்த நந்தி சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இது மசூதியின் அடியில் கிடைத்தது என்று பரப்பப்படுவது தவறான தகவல். நாமக்கல் மாவட்டத்தின் அரியூர் கிராமத்தின் செல்லாண்டியம்மன் கோயிலில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோயிலைச் சுற்றி, சுற்றுச்சுவர் அமைப்பதற்காகத் தோண்டிய போது, மண்ணில் புதைந்த நிலையில் சேதமான நந்தி சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 



இதுகுறித்த தகவல்கள் பல்வேறு நாளிதழ்கள், தொலைக்காட்சி செய்திகள் முதலானவற்றில் இடம்பெற்றுள்ளன.  நாமக்கல் மாவட்டம் மோகனூரில் அரியூர் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள பாண்டீஸ்வரர் கோயில் பிரபலமானது. இந்தக் கோயிலுக்கு அருகில் செல்லாண்டியம்மன் கோயில் உள்ளது. இந்தப் பகுதி பாண்டியர்களால் ஆட்சி செய்யப்பட்டது எனக் கூறப்படுகிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, இதே பகுதியில் வெள்ளைக் கற்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலையும், இதே போன்ற நந்தி சிலை ஒன்று அளவில் பெரியதாகவும், சிதிலமடைந்து கிடைக்கப் பெற்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அவற்றை ஆய்வுக்காக சேலம் தொல்லியல் துறையினர் எடுத்துச்சென்று, சேலம் அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர். 






கோயில் புனரமைப்புக்காகத் தோண்டியபோது, நந்தி சிலை கிடைத்தது அங்கு பணியில் இருந்தோரை ஆச்சர்யப்படுத்தி உள்ளது. இதுகுறித்து பணியாளர்கள் கோயில் நிர்வாகிகளிடம் தகவல் தெரிவித்தவுடன், வருவாய்த்துறையினர் அப்பகுதிக்குப் பயணம் மேற்கொண்டு, நந்தி சிலையை எடுத்துப் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இதனைக் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்காகத் தொல்லியல் துறையினரிடம் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும் வருவாய்த்துறையினர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தின் போது, மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சிவசேனா அரசின் உத்தரவின் பேரில், மும்பை மாநகராட்சி நடிகை கங்கனா ரனாவத்தின் அலுவலகத்தை இடித்தது. கங்கனா ரனாவத்தின் கட்டிடம் சட்ட விரோதமாகக் கட்டப்பட்டதாகக் கூறப்பட்டது. அப்போது இதேபோல, மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள கத்ரா பஜார் பகுதியின் மசூதி மும்பை பாந்த்ரா பகுதியில் இருப்பதாகவும், அதனை சிவசேனா கட்சியின் தலைவரும், மகாராஷ்ட்ரா முதல்வருமான உத்தவ் தாக்கரே இடிக்க வேண்டும் எனவும் சவால் விடப்பட்டதாக, சமூக வலைத்தளங்களில் வைரலானது. 


அதனைப்போல, பல போலியான தகவல்கள் இந்திய மக்களிடையே மத உணர்வைத் தூண்டுவதற்காகப் பரப்பப்பட்டு வருகின்றன. நாமக்கல்லில் தோண்டி எடுக்கப்பட்ட நந்தி சிலை குறித்த பொய்யான தகவலும் அப்படியான ஒன்றே. 


வாட்சப்பில், சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்யப்படுவது அனைத்தும் உண்மையல்ல. உண்மை தகவல் என தெரியாமல் அதை மற்றவர்களுக்கு பரப்புவது சமூகத்துக்கு கேடு விளைவிக்கும்.