மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வாக நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் ஆயுஷ் மருத்துவத் துறைகளுக்கான இளநிலை, முதுநிலை ஆகிய பட்டப் படிப்புகளுக்கு நீட் தேர்வில் தேர்ச்சியடைவது கட்டாயமாக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு வரை, தேசிய அளவிலான All India Pre-Medical Test (AIPMT) தேர்வு நடத்தப்பட்டது; மாநிலங்கள் தங்கள் மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர்களைத் தாங்களே தேர்வுசெய்து கொள்ளலாம் என்ற அடிப்படையில் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்று வந்தது.
2013ல் முதல் நீட் தேர்வு!
2013ஆம் ஆண்டு முதல்முறையாக நடத்தப்பட்ட நீட் தேர்வு, அதன்பிறகு நடைபெறவில்லை. 2016ஆம் ஆண்டு, ஏப்ரல் 13 அன்று, உச்சநீதிமன்றம் இந்திய மெடிக்கல் கவுன்சில் சட்டத்தில் 10-D என்ற பிரிவை அறிமுகப்படுத்தியதை ஏற்றுக்கொண்டது. இதன்படி, இந்தியா முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை ஆகிய பட்டப் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத் தேர்வு நடைபெறும் எனவும், ஆங்கிலம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் 13 அன்று, தமிழக சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றினார். எதிர்க் கட்சியான அதிமுகவின் ஆதரவோடு இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும், திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவதை முதன்மை லட்சியமாக அறிவித்திருந்தது.
2013ஆம் ஆண்டு, மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் குறித்த வழக்கின் மீது அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி தனது கண்டனங்களைப் பதிவுசெய்திருந்தார். நுழைவுத் தேர்வுகளைத் தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வரும் திமுக, 2006ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது, மருத்துவம், பொறியியல் ஆகிய துறைகளில் இருந்த நுழைவுத் தேர்வுகளை நீக்கி, பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களைத் தகுதியாக மாற்றி அறிவித்தது. இதன்மூலம் தமிழ்நாட்டில் மருத்துவம், பொறியியல் பட்டப் படிப்பு பெற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு, திமுக எதிர்க் கட்சியாக இருந்த போதும் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. நீட் தேர்வு இட ஒதுக்கீட்டுக்கும், மாநில சுயாட்சிக்கும் எதிராக இருப்பதாகத் திமுக தரப்பில் முன்வைக்கப்படுகிறது. நீட் தேர்வை எதிர்ப்பதோடு, மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் INI-CET என்ற தேர்வு அறிவிக்கப்பட்டிருப்பதை எதிர்த்துள்ளார் மு.க.ஸ்டாலின். வெறும் நீட் எதிர்ப்பு மட்டுமல்லாமல், இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வுக்கான கட்டணம் 2 ஆயிரம் ரூபாயாக இருந்ததையும், பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்சாதியினருக்கான கட்டணம் 1500 ரூபாயாக இருந்ததையும் கண்டித்துள்ளது திமுக.
அதிமுக தீர்மானம் நிராகரிப்பு!
2017ஆம் ஆண்டு, பிப்ரவரி 1 அன்று தமிழக சட்டமன்றத்தில் அன்றைய அதிமுக அரசு நீட் தேர்வுக்கு எதிராக சட்டத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. அதனை மத்திய அரசு, அப்போதைய மாநில அரசு ஆகிய யாரும் வெளிக்கொண்டு வராத நிலையில், திமுக கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அறிக்கை வெளியிட்டது. நீட் தேர்வில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவதைத் தரவுகளுடன் தனது சமூக வலைத்தளப் பக்கங்களிலும் பகிர்ந்திருந்தார் மு.க.ஸ்டாலின்.
மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதன் பின்னணியிலும் திமுகவின் பல்வேறு தொடர் அறிக்கைகளுக்குப் பங்குண்டு.
கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் போது, நீட் தேர்வு அறிவிக்கப்பட்ட போது, மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டாம் எனவும் அறிக்கை வெளியிடப்பட்டது. நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் மேற்கொள்ளப்பட்டு, மோசடி நடந்ததையும் திமுக கண்டித்தது. நீட் தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடி, தமிழக மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைவது முதலானவற்றையும் திமுக 2020ஆம் ஆண்டு கண்டித்துள்ளது.
நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவர்களின் இறுதி அஞ்சலியில் கலந்து துக்கத்தில் பங்குகொண்டது திமுக. `நீட் ஒரு கோரமுகம்’ என்று மாணவி ஒருவரின் தற்கொலையின் போது அறிவித்தார் மு.க.ஸ்டாலின். அனிதா முதல் தற்கொலை செய்துகொண்ட அனைத்து மாணவர்களின் மரணத்தின் போதும், திமுக பாஜகவையும், அதிமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்தது.
திமுகவை கிண்டலடித்த எடப்பாடி...!
நீட் தேர்வில் இருந்து எப்படி விலக்கு பெறுவது எனத் திமுகவினர் சொல்லட்டும் என அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேலியாக சொன்ன போது, `எங்களுக்கு ரத்து பண்ணுவது எப்படியென்று தெரியும்’ என்று பொதுக்கூட்ட மேடை ஒன்றில் சொன்னார் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின். திமுகவின் கே.என்.நேரு நீட் குறித்து பேசிய போது, `மாணவர்களைக் காப்பி அடிக்க வைத்து, தேர்ச்சி பெறச் செய்வோம்’ என்றார். டி.ஆர்.பாலு, செந்தில்குமார் முதலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையிலும், திருச்சி சிவா மாநிலங்களவையிலும் நீட் விலக்கு கோரி உரையாற்றினர்.
கடந்த 2020ஆம் ஆண்டு, பேரறிஞர் அண்ணா பிறந்தாள் அன்று, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி வெளியிட்ட கடிதம் ஒன்றில், `இன்னொரு நீட் மரணம் வேண்டாம். இன்னும் எட்டு மாதங்கள் போகட்டும். நம் கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் அமையும் தி மு கழக ஆட்சியில் நீட் இருக்காது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
2019ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தலிலும் பேசுபொருளாக இருந்தது நீட் தேர்வு. திமுகவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் திமுக தலைவர்கள் பலரும் நீட் தேர்வு குறித்து பேசியுள்ளனர். திமுகவின் பிரசார விளம்பரங்களில் நீட் தேர்வுக்கு எதிரான விளம்பரங்கள், அனிதாவின் மரணத்தை முன்வைத்த விளம்பரங்கள் முதலானவை இடம்பெற்றிருந்தன. 2 தேர்தல்களிலும் மக்கள் திமுகவுக்குத் தங்கள் வாக்குகளை அதிகளவில் செலுத்தியிருந்தனர்.
தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற போது, கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தது. நீட் குறித்த கேள்வி ஒன்றிற்கு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இந்தக் கல்வியாண்டில் மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராக வேண்டும் என்று அறிவித்த போது, திமுக எதிர்க் கட்சியாக இருந்த போது நடத்திய போராட்டங்களுக்கும், வெளியிட்ட அறிக்கைகளுக்கும் மாற்றாக செயல்படுவதாகக் கருத்துகள் எழுந்தன.
எனினும், முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு குறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான கமிட்டி ஒன்றை அறிவித்தது. இதனை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பாஜகவினர் நீதிமன்றத்தின் கண்டனங்களுக்குள்ளாகினர்.
மருத்துவச் சேர்க்கையில் அனைத்திந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனத் திமுகவு, அதன் கூட்டணி கட்சிகளும் தொடுத்த வழக்கின் அடிப்படையில், திமுகவுக்குச் சாதகமான தீர்ப்பு வந்தது. எனினும், மத்திய அரசு அதனை அமல்படுத்த கால தாமதம் செய்ததால், மீண்டும் நீதிமன்றத்தை நாடி, மத்திய அரசை இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அறிவிக்கச் செய்தது திமுக.
விலக்கு பெறுவதில் வெற்றி பெறுவது கடினம்!
நேர்மறையான முன்னெடுப்புகள் ஒருபக்கம் இருக்க, திமுகவும் அதிமுகவைப் போலவே நீட் தேர்வு விலக்கு பெறுவதில் வெற்றி பெறுவது கடினம் என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தனது சட்டமன்றக் கன்னிப் பேச்சில் நீட் விலக்கு வேண்டும் எனவும், அரியலூரில் மருத்துவக் கல்லூரிக்கு மறைந்த மாணவி அனிதாவின் பெயர் சூட்டப்பட வேண்டும் என்றார். நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டியின் முன்பு, நீட் தேர்வுக்கு எதிரான திமுக இளைஞரணியின் நிலைப்பாட்டை அனிதாவின் அண்ணனை அழைத்துச் சென்று, அவர்முன் சமர்பித்தார்.
இவற்றைக் கடந்து இந்தக் கல்வியாண்டின் நீட் தேர்வு நடைபெற்றிருப்பதோடு, மேட்டூர் மாணவர் தனுஷ் தற்கொலை செய்திருப்பதும் திமுகவின் முயற்சிகளால் எந்த முன்னேற்றமும் நிகழாததைக் குறிக்கின்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமான அறிக்கையை வெளியிட்டிருப்பதோடு, உதயநிதி ஸ்டாலின் இறந்த மாணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
எல்லைக்கு அப்பாற்பட்ட வாக்குறுதி!
2017ஆம் ஆண்டு, மாணவி அனிதா மரணமடைந்த போது, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனிதாவின் குடும்பத்திற்கு 7 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்குவதாக அரசு தரப்பில் செய்திக் குறிப்பு வெளியிட்டார். அவரது செய்திக் குறிப்பில், அனிதா மரணத்திற்குக் காரணமான நீட் தேர்வு குறித்தோ, அதனை நீக்குவது குறித்தோ எந்த அறிவிப்பும் இல்லை. எனினும் அவர் தனக்குத் தானே முரண்படும் விதமாகத் தற்போது திமுக ஆட்சியில் தனுஷ் இறந்ததற்கு நீட் தேர்வை ரத்து செய்யாததற்குத் திமுகவே காரணம் என்று பேட்டி அளித்து, இறந்த மாணவருக்கு அஞ்சலி தெரிவித்திருந்தார்.
தேர்தல் வாக்குறுதியில் நீட் விலக்கு குறித்த வாக்குறுதியைத் திமுக தனது எல்லைக்கு அப்பாற்பட்டு அளித்துவிட்டதாகவே தெரிய வருகிறது. ஏற்கனவே அதிமுக ஆட்சியில் 2 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, எந்த மாற்றமும் நிகழாத நிலையில், தற்போது திமுக அரசு ஏ.கே.ராஜன் கமிட்டியின் பின்னணியில் இருந்து நீட் விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்.எல்.ஏ எழிலன் நடத்தும் அரசுசாரா அமைப்பு கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருமாறு பொதுநல வழக்கைத் தொடுத்துள்ளது.
திமுகவின் இந்த இரண்டு முயற்சிகளும் மாணவர்களுக்குச் சாதகமாக அமையுமா என்பதைக் காலம் உணர்த்தும். எனினும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திமுக காட்டிய போர்க் குணம், தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்த பிறகு எங்கு போனது என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது தவிர்க்க இயலாதது.