அதிமுக போராட்டம்
சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அரசை கண்டித்து, அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. சென்னையில் அமைப்பு ரீதியிலான 9 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தலைமையில் திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பியும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் கோசம் எழுப்பப்பட்டது.
”தனியார் கூட்டம்"
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், 18 மாதங்களில் திமுக ஆட்சியில், சொத்து வரி, மின் கட்டண உயர்வு பால் விலை உயர்வு போன்றவற்றை உயர்த்தியுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் மக்கள் வாழ வழியில்லாத நிலை உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடத்தும் கூட்டத்தை தனியார் நிறுவன கூட்டமாக தான் பார்க்க முடியும். அதை கட்சிக் கூட்டமாக பார்க்க முடியாது” என்று தெரிவித்தார்.
"ஓபிஎஸ் நட்பை கைவிட வேண்டும்"
மேலும் அவர் கூறியதாவது, "பன்ருட்டி ராமச்சந்திரன், மூத்த தலைவராக இருந்தவர். அவரை மதிக்கிறேன்,கடுமையாக விமர்சனம் செய்ய மாட்டேன். கண்ணுக்கு தெரிந்து கட்சியின் கொடி, சின்னம், மாவட்ட செயலாளர்கள், கிளைக்கழக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுக சார்பில் பல்வேறு விழாக்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தப்படுகிறது. ஓபிஎஸ் எதையும் செய்யவில்லை. அதற்கான ஆட்களும் இல்லை. அவருக்கு நன்மதிப்பு உள்ளது, அதனை கெடுத்துக்கொள்ள கூடாது. கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொல்வார்கள். அதுபோல ஓபிஎஸ் நட்பை விட்டு விலக வேண்டும் என பன்ருட்டி ராமச்சந்திரனுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்” என்றார்.
"போராட்டம் - அரசுக்கு கவலை இல்லை"
தொடர்ந்து பேசிய அவர், ” பரந்தூர் விமான நிலையம் அதிமுக ஆட்சியில் பரிந்துரை செய்யப்பட்டதாக இருந்தால், மக்கள் ஏன் அப்பொழுது போராடவில்லை. பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 136 நாட்களாக மக்கள் போராடி வருகின்றனர். இது குறித்து அரசுக்கு கவலை இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கடுமையாக சாடினார்.
”பணிகள் துவக்கம்”
”பாஜகவுடன் தோழமை நட்பு உள்ளது. ஆனால் சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் இருந்தோம், உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு அவகாசம் உள்ளது. அதற்கான பணிகளை அதிமுக துவங்கியுள்ளது. அந்த நேரத்தில் தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். அதிமுக தலைமையை ஏற்று எந்த கட்சிகள் வருகிறதோ அந்த கட்சிகளுடன் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்" என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க