தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனம் தஞ்சாவூர், இந்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஒரு முன்னோடி ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமாகும். உணவு பதப்படுத்துதல் சார்பான ஆராய்ச்சி மற்றும் கல்வி அளிப்பதோடு மட்டுமல்லாமல், விவசாயிகள், தொழில் முனைவோர் மற்றும் இளைஞர்களுக்கு உணவு பதப்படுத்துதல் சார்ந்த தொழில் மேற்கொள்வதற்கு பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி வருகிறது.
தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் நிறுவனர் இயக்குநர் முனைவர் சுப்ரமண்யன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, ஒரு சிறப்பு விரிவுரை நிகழ்வை தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி துறை & அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் செயலர் மற்றும் தலைவர் முனைவர் சேகர் சி முண்டே, சிறப்பு விருந்தினராக காணொளி வாயிலாக கலந்துகொண்டு பேசுகையில், 21 ஆம் நூற்றாண்டின் உணவு, ஊட்டச்சத்து மற்றும் வேளாண் துறைகள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் பண்டைய நீர் மேலாண்மை அமைப்பு (கல்லணை), சர்க்கரை படிக செயல்முறை மற்றும் கால்நடைகளின் வளர்ப்பு போன்ற பாரம்பரிய அறிவியல் தொழில்நுடபங்களை பற்றியும், வளர்ந்து வரும் நவீன அறிவியலின் பங்கு மற்றும் அனைவருக்கும் ஊட்டச்சத்து உணவை வழங்குவதில் உள்ள சவால்கள், எதிர்கொள்ளும் அணுகுமுறைகள் பற்றி, நம் நாட்டின் ஊட்டச் சத்து குறைபாட்டின் பாதிப்புகளையும் மற்றும் அதீத ஊட்டச்சத்தால் ஏற்படும் பாதக சூழ்நிலை இரண்டையும் அவர் சுட்டிக்காட்டினார்.
உலகளாவிய உணவு தட்டுப்பாட்டின் அடிப்படையில் இந்தியா 119 நாடுகளில் 103 வது இடத்தில் உள்ளது, மறுபுறம், இந்தியாவில் 61 சதவீத்திற்கும் அதிகமான இறப்புகள் வாழ்க்கை முறை மாற்றங்கள் அல்லது தொற்று அல்லாத நோய்களால் ஏற்படுகின்றன, இதில் 26 சதவீதம் இருதய நோய்களால் ஏற்படுகிறது. பருப்பு வகைகளுடன் ஒப்பிடும்போது சிறுதானியங்களில் 50 சதவீத அதிக அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் அதிக அளவு இரும்பு, துத்தநாகம் மற்றும் கால்சியம் உள்ளது. பெருமளவில் பெண்களின் இரத்த சோகைக்கு உணவில் சிறுதானியங்களை சேர்ப்பது சரியான தீர்வாக இருக்கும். வறட்சியை தாங்கி நிற்கும் பயிர் சிறுதானியங்களே. அருகாமையில் கிடைக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுப்பது மாசுபாடு மற்றும் கார்பன் பூட் பிரிண்ட் ஐ குறைக்க உதவும். நாம் உண்ணப்படாத உணவு 1.4 பில்லியன் ஹெக்டேர் நிலத்தில் விளைவித்த அல்லது 30 சதவீதம் விவசாய நிலப்பரப்பில் விளைவித்த உணவுக்கு சமமாகும். மேலும் எதிர்கால நீர் நெருக்கடிகளுக்கு தயாராக வேண்டுமென்று எச்சரித்தார்.
இந்தியாவின் 54 சதவீதம் நிலப்பரப்பில் உள்ள வேளாண் விளைநிலங்களில் மிக அதிகமான தண்ணீர் பற்றாக்குறை உள்ளதாகவும், இதற்கு நீர் பயன்பாட்டு முறையை சீரமைத்தல், நிலத்தடி நீரை ரீசார்ஜ் செய்தல் மற்றும் நீர்நிலைகளை வரைபடமாக்குதல் ஆகியவை தேவை. தரமான புரதம், பாதுகாப்பான மற்றும் ஊட்டச்சத்து உணவுகள், காலநிலை மாற்றம் மற்றும் குறைந்த நீர் பயன்பாடு ஆகியவற்றுடன் குறைந்த உற்பத்தி செலவு செயல்திறன் ஆகியவற்றை மேம்படுத்த அவர் பரிந்துரைத்தார். இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு எதிரான சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் சி. அனந்தராமகிருஷ்ணன் தலைமை வகித்து பேசினார். இந்நிகழ்ச்சியில் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் சிறந்த விஞ்ஞானிகள், தொழில்நுட்ப மற்றும் நிர்வாக பிரிவு ஊழியர்களை கௌரவிக்கும் வகையில், 2021 ஆம் ஆண்டிற்கான முனைவர் சுப்ரமண்யன், சிறந்த ஊழியர் விருதுகள் வழங்கப்பட்டன. விஞ்ஞானிகள் பிரிவில் டாக்டர் சினிஜா, பேராசிரியர் மற்றும் டாக்டர். சண்முகசுந்தரம், பேராசிரியர், தொழில்நுட்ப பிரிவில் யோகேஸ்வரி, மூத்த தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் நிர்வாக பிரிவில் இளநிலை செயலக உதவியாளர், வினோத்குமார், ஆகியோர் விருதுகள் பெற்றனர்