தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை அதிக வேலை வாங்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக விடுதிக் காப்பாளர் சகாயமேரியை கைது செய்தனர். ஆனால், விடுதிக் காப்பாளர் உள்ளிட்டோர் மதம் மாறுமாறு வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டார் என பெற்றோர் புகார் எழுப்பினர். மேலும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  போராட்டங்களும் நடத்தப்பட்டது இதற்கிடையில் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், உண்மையை கண்டறிவதற்காக விசாரணை நடத்த பாஜக தலைவர் ஜே.பி. நட்டா 4 பேர் கொண்ட குழுவை அமைத்தார்.


அக்குழுவில், எம்பியும் மத்தியபிரதேச மாநில பாஜக துணைத் தலைவருமான சந்தயா ரே,  முன்னாள் பாஜக மகளிரணி செயலாளரும், மகாராஷ்டிரா மாநில பாஜக துணைத் தலைவரும், மகளிர் உரிமைப் போராளியுமான சித்ரா  தாய் வாக், கர்நாடக மாநில மகளிர் அணி தலைவர் கீதா விவேகானந்தா, முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான விஜயசாந்தி ஆகியோர் கொண்ட குழுவினர் தஞ்சை மாவட்ட கலெக்டர் சந்தித்து விரைந்து அறிக்கை அளிக்க அறிவுறுத்தினர்.



முன்னதாக இந்த குழுவினர் அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தில் உள்ள மாணவியின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறி கூறினர். பின்னர் தஞ்சை மாவட்ட கலெ்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலீவரை சந்தித்து விட்டு, வெளியில் வந்த விஜயசாந்தி  செய்தியாளர்களிடம் கூறுகையில், கலெக்டரை  சந்தித்து நடந்த விபரங்களை எடுத்து கூறியுள்ளோம். வழக்கு சி.பி.ஐ.,க்கு சென்றதால், அவர் பேசுவதற்கு கொஞ்சம் தயக்கம் காட்டினார். இருப்பினும் முழுமையாக நாங்கள் கூறியதை கேட்டுக்கொண்டார். இறந்த மாணவியின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கவேண்டும். இந்த மாணவிக்கு நடந்தது போல, மற்ற மாணவிகளுக்கு நடக்க கூடாது.


அது மிகவும் கஷ்டமாக இருக்கும். மதமாற்ற சட்டத்தை இன்னும் வலுப்படுத்த வேண்டும். அதற்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும். மாணவியின் குடும்பத்தை சந்தித்துள்ளோம். கலெக்டரிடம் விளக்கம் அளித்துள்ளோம். கண்டிப்பாக நல்ல நியாயம் கிடைக்கும் என கலெக்டர் சொல்லியுள்ளார். முழுமையாக விசாரித்து, ஜே.பி.நட்டாவிடம் அறிக்கை அளிப்போம். மாணவிக்கு நல்ல நீதி கிடைக்கவேண்டும். நல்ல செய்தி வரணும் என எதிர்பார்க்கின்றோம். நான்கு மாநிலத்தில் இருந்து வந்துள்ளோம். மாணவி தற்கொலைக்கு நல்ல நீதி  வரவேண்டும்.



மதமாற்றம் தொடர்பாக இல்லை, வேறு எந்த விஷயத்திற்காகவும் மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளவது தவறானது. தைரியமாக எந்த விஷயமாக இருந்தாலும் மாணவிகள் சந்திக்க வேண்டும். இது போன்று மதமாற்றம் நடைபெற்றால், அந்த பள்ளியை விட்டு மற்ற பள்ளியில் சேர்ந்து கொள்ளவேண்டும். இதற்காக உங்களது வாழ்க்கை இழப்பது கஷ்டமாக இருக்கின்றது பெற்றோர் உங்கள் மீது எவ்வளவு ஆசை வைத்து இருப்பார்கள். நீங்கள் வெளியில் சொல்லாமல், மனசுக்குள்ளே வைத்து கொண்டு கஷ்டப்பட்டு கொண்டு, தற்கொலை செய்துக்கொண்டு இறப்பது ஒரு நிமிடத்தில் முடிந்தும் விடும், வாழ்வு முழுவதும் உங்கள் பெற்றோர்கள் கஷ்டப்படுவார்கள். வாழ்வில் போராட வேண்டும். மாணவிகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கின்றது. இறந்த மாணவி நல்ல படிப்பக்கூடியவர். மாணவி ஜாக்கிரதையாக இப்பள்ளியை விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். 12 ஆம் வகுப்பு மாணவி. வாழ்க்கையில் போராட்டம் இருக்கும் போராட வேண்டும்.


தமிழக அரசு மாணவி விவகாரத்தில், மிகவும் மெளனமாக உள்ளது. ஏன் மெளனமாக உள்ளது என தெரியவில்லை. தவறு செய்தார்கள் என நான் நினைக்கின்றேன்.  தமிழக அரசு ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்கள். இதுவரை  மாணவியின் குடும்பத்திற்கு யாரும் ஆதரவு அளிக்கவில்லை. பா.ஜ.க சார்பில் 10 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் மாணவியின் குடும்பத்திற்கு கொடுக்க வேண்டும். பா.ஜ.க இதில் அரசியல் செய்ய விரும்பவில்லை.  அக்குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்க வேண்டும். மதமாற்றத்திற்காக கட்டாயப்படுத்தியாக அந்த மாணவி கூறியுள்ளார். அதனால் நான் தற்கொலை செய்து கொண்டுள்ளேன் என சொல்லியுள்ளார். அந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். இதில் அரசியல் செய்வதற்கு எதுவும் இல்லை.  குழப்பத்திற்கும் எதுவும் இல்லை.


தமிழக முதல்வர் ஏன் மௌனமாக இருக்கின்றீர்கள் என்று நான் கேட்க விரும்புகின்றேன். ஏன் பேசமாட்டீர்களா, ஒரு தலைபட்சமாக தான் இருக்கின்றீர்களா, முதல்வர் மெளனமாக இருப்பதை பார்த்தால், அதில் எங்களுக்கு சந்தேகம் வருகிறது. ஏன் என்றால் அதில் தவறு இருக்கின்றது. தவறு  செய்வதற்கு ஆதரவு அளிக்கிறார்கள், இறந்தவருக்கு ஆதரவு அளிக்க மறுப்பது தெரிகிறது. முதல்வர் கொஞ்சம் மனசை மாற்றிக்கொண்டால் நன்றாக இருக்கும். 


இது போன்ற விஷயம் மற்ற மாணவிகளுக்கு நடக்காமல் இருக்க முதல்வர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த மாணவியின் தந்தை 25 ஆண்டாக தி.மு.க.,வில் தொண்டனாக உள்ளார். அவர் கட்சியினருக்கு இந்த நிலைமை வந்ததுள்ளது. ஆனால் முதல்வர் எந்த நடவடிக்கை எடுத்தார் என தெரியவில்லை. முதல்வரே ப்ளீஸ் உங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ளுங்கள். தி.மு.க., என்றால் உங்களை பற்றி எங்களுக்கு நன்றாக  தெரியும்.


எனவே இப்பவாவது மனசு மாறி  மக்களுக்கு நல்லது செய்யுங்கள். மைக்கேல்பட்டி செல்வதற்கு எங்களுக்கு அனுமதி கிடைக்காததால், நாங்கள் செல்ல வில்லை. இந்த விஷயத்தை மாற்றிவிடக்கூடாது, மாணவிவிற்காக வந்துள்ளோம். தமிழக அரசு இந்த பிரச்சனையை மாற்றி வருகிறது. மாணவியின் தற்கொலை சம்பவத்தை நாங்கள் சீரியசாக எடுத்துள்ளோம். தேசிய தலைவர் ஜேபி. நட்டாவும் சீரியசாக எடுத்து, எங்களை அனுப்பியுள்ளார். திமுக இந்த விஷயத்தை பற்றி எதுவும் செய்யாததை, தமிழக அரசிடம் கேட்க வேண்டும். விரைவில் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்போம்  என்றார். இதனை தொடர்ந்து தஞ்சை மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு சென்று, ஏடிஎஸ்பி ஜெயச்சந்திரனை சந்தித்து,  பள்ளி மாணவி தற்கொலை குறித்து நியாயம் கேட்டு கொண்டனர்.