காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி, மாங்காடு மற்றும் குன்றத்தூர்  நகராட்சி, ஶ்ரீபெரும்புதூர்,உத்திரமேரூர், வாலாஜாபாத் பேரூராட்சிகளுக்கு வருகின்ற பிப்ரவரி 19ந் தேதியன்று  நகர்ப்புற தேர்தல் நடைபெறுகிறது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகளிலும், குன்றத்தூர் நகராட்சியில் 30 வார்டு, மாங்காடு நகராட்சியில் 27 வார்டுகள், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 15 வார்டுகள், வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள், உத்திரமேரூர் பேரூராட்சியில்  18 வார்டுகள் என 156 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.  



 

சூடு பிடித்த மனுத்தாக்கல்

 

அதையொட்டி கடந்த 28 ஆம் தேதி முதல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். கடந்த மூன்று தினங்களாக வேட்புமனு தாக்கல் மந்தமாக இருந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 40 வது வார்டு பகுதியை சேர்ந்த 30 வயதுடைய இளம் பெண் பட்டதாரியும் விசிக ஆதரவாளருமான பானுப்பிரியா என்பவர் சுயேட்சை வேட்பாளராக தனது கணவர் மற்றும் ஆதரவாளர்கள் என   50க்கும் மேற்பட்டோர் உடன்  காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து  உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

 



 

திமுக-விசிக போட்டி

 

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 46வது வார்டில்  திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிகவிற்கு சீட்டு வழங்காததால்  அதிருப்தியடைந்த விசிக வேட்பாளர் அகிலாண்டேஸ்வரி டேவிட் என்பவர்  சுயேச்சையாக போட்டியிட தனது கணவர் டேவிட் மற்றும்  ஆதரவாளர்கள் என 50க்கும் மேற்பட்டவர்களுடன் ஊர்வலமாக வந்து தனது  வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கூட்டணி கட்சியாக இருக்கும் திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகளிடையே இடப்பங்கீடு தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 51 வார்டுகளில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகளில் 5 இடங்களை விசிக கேட்டு வரும் நிலையில், திமுக தரப்பில் இருந்து 2 பொது வார்டுகளை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.  



 

இந்நிலையில் தற்போது விடுதலை சிறுத்தை கட்சிகள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக வேட்பாளரை நிறுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக சார்பில் வேட்பாளராக லைலா காண்டீபன் என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . நேற்றைய தினம் வரையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 10 பேரும், குன்றத்தூர் நகராட்சியில் 2 பேரும், மாங்காடு நகராட்சியில் 12 பேரும், உத்திரமேரூர் பேரூராட்சியில் 2பேரும், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 8 பேரும் என 34 மட்டுமே தங்களது  பேர் வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளனர். வாலாஜாபாத் பேரூராட்சியில் தற்போது வரையில்  ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.