தமிழ்நாட்டின் மிகப்பெரிய விவசாய பகுதியான டெல்டா பகுதி விவசாயம் காவிரி நீரையே பெரும்பாலும் நம்பியுள்ளது. தமிழ்நாட்டிற்கான காவிரி நீர் கர்நாடகாவில் இருந்து முறையாக திறக்கப்பட்டால், குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கான நீர் பற்றாக்குறையின்றி தமிழ்நாட்டில் கிடைக்கும்.


17 ஆயிரம் கன அடி நீர்:


கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்காக திறக்கப்படும் தண்ணீரானது தமிழ்நாட்டின் எல்லையான தர்மபுரியில் உள்ள பிலுகுண்டுலு வழியாக ஒகேனக்கலை வந்தடைவது வழக்கம் ஆகும்.  இதன்படி, காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்காக திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக – கர்நாடக எல்லையான பிலுகுண்டுலுவை நேற்று முன்தினம் வந்தடைந்தது.


கர்நாடக கரையோர பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிலுகுண்டுலுவில் நேற்று காவிரி நீரின் வரத்து 12 ஆயிரம் அடி இருந்து வந்த நிலையில், ஒகேனக்கலில் நீர்வரத்து 17 ஆயிரம் கன அடி நீராக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கர்நாடகாவில் கனமழை:


கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரளாவின் வயநாடு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால், கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து 25 ஆயிரம் கன அடிக்கும் மேல் தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டு வருகிறது. காவிரியில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையின் நீர்வரத்து 177 கன அடியில் இருந்து 3 ஆயிரத்து 343 கன அடியாக அதிகரித்துள்ளது.


தொடர்ந்து மழை பெய்து வருவதால், காவிரி நீரில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும், இதனால் தமிழ்நாட்டிற்கு வரும் நீர்வரத்தும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள காரணத்தால் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.


ஓகேனக்கல்லில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதால், அருவிகளில் பாய்ந்தோடும் நீரை பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். 


மேலும் படிக்க: Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து 177 கன அடியில் இருந்து 3,343 கன அடியாக அதிகரிப்பு..


மேலும் படிக்க: TN Rain Alert: உஷார் மக்களே.. இந்த 4 மாவட்டங்களில் மழை இருக்கு.. இதோ லேட்டஸ்ட் மழை அப்டேட்..