தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் கடந்த சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. நேற்று முன் தினம் சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. நேற்று காலை பல பகுதிகளில் லேசான மழை பெய்து வந்தது. இதனால் உஷ்ணம் தணிந்து காணப்படுகிறது.


இது ஒருபுறம் இருக்க, வடக்கு ஆந்திரா - தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றும்  அதே பகுதிகளில்  நிலவுகிறது. இது அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 ஏற்கனவே வட மாநிலங்களான டெல்லி, உத்தரகண்ட், ஹிமாச்சல பிரதேசம், உத்திர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், அப்பகுதிகள் வெள்ளக்காடாய் மாறியுள்ளது. இந்நிலையில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு  பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக ஆந்திரா மற்றும்   வட மாநிலங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை தொடரும் எனவும் ஒடிசா, கோவா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மீனவர்களுக்கான எச்சரிக்கை: 


வங்கக்கடல் பகுதிகளில் இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல் அரபிக்கடல் பகுதிகளில் இலட்சத்தீவு பகுதிகள், வடக்கு கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40  முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.