இன்று மே 9-ஆம் தேதி உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சமூக வலைத்தளம் முழுவதும் தனது தாயுடன் இருக்கும் புகைப்படங்களை பலரும் பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேரிலும் ஒரு சூப்பரான கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது.


திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே செம்மங்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய மனைவி கங்கையம்மாள் (வயது 108). இவர்களுக்கு 4 மகன்கள், 5 மகள்கள்  என குழந்தைகள் 9 பேர் உள்ளனர். இதில் 2 மகன்கள் தாயுடன் சேர்ந்து சொந்த ஊரில் பூர்வீக தொழிலான விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். தந்தை முத்துசாமி தவறிவிட்ட நிலையில் தாய் கங்கையம்மாள் தனது மகன்கள் அரவணைப்பில் தற்போது உள்ளார். மருமகள்களின் பாசத்தையும் பெற்ற கங்கையம்மாளை அந்த ஊரில் தெரியாதவர்களே இல்லை. கங்கையம்மாள் குடும்பத்தின் மீது அன்பும், மரியாதையும் கொண்டிருக்கிறார்கள் செம்மங்குடி கிராம மக்கள்.



தற்போது மகன்-மகள் வழயில் 16 பேரக்குழந்தைகள் உள்ள நிலையில் விசேஷ நாட்கள் என்றாலே செம்மங்குடி கங்கையம்மாள் வீட்டில் கொண்டாட்டம் களைகட்டும். இந்நிலையில் அன்னையர் தினத்தை கொண்டாடாமல் எப்படி? மகன், மகள்கள், பேரக் குழந்தைகள் என அனைவரும் ஒன்று கூடி அன்னையர் தினத்தை கொண்டாட முடிவு செய்தனர். அதன்படி முன்கூட்டியே வெளியூரில் இருந்து தங்களது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு வந்து இறங்கினார் அனைவரும், அவ்வளவுதான், வீடே திருவிழா கோலமானது.


"கங்கையம்மாள் எங்களுக்கு மட்டும் அம்மா இல்லை, இந்த ஊரில் பிறந்து வளர்ந்த அவர் ஊர் மக்கள் அனைவருக்குமே அம்மா" என்கிறார் இரண்டாவது மகன் ராமமூர்த்தி.



அம்மாவிற்கு பட்டு சேலை கட்டி, அலங்காரம் செய்து, நாற்காலியில் அமர வைத்து, கேக்குகள் வெட்டி அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடினர். மேலும் நமது கலச்சாரத்தின் படி குடும்பத்தில் மூத்தவர்கள் என்ற முறையில் அனைவரும் காலில் விழுந்து ஆசியை பெற்றுக்கொண்டனர். மேலும் இனிப்புடன் பலவித உணவுகளும் பரிமாறி, ஊர் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்கள் வாழ்த்துக்களை கங்கையம்மாளுக்கு தெரிவித்த நிகழ்வு, அன்னையர் தின விழாவை  செம்மங்குடி கிராம விழாவாகவே மாற்றிவிட்டது.  



108 வயதிலும் ஒரு சில வார்த்தைகளை பகிர்ந்து கொண்ட கங்கையம்மாள் "என் பிள்ளைகள் என்னை நன்றாக பார்த்துக்கொள்கிறார்கள், அனைவரும் இதேபோல் நலமாக இருக்க வேண்டும்" என்று தாயுள்ளத்தை வெளிப்படுத்துகிறார்.



வாட்ஸ்அப், வீடியோ கால் என்னும் நவீன யுகத்தில் வாழும் பலருக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் சொல்ல கூட நேரமில்லாத கால நிலையில், ஒட்டுமொத்த குடும்பம், மருமகன், மருமகள், பேர குழந்தைகள் என அனைவரும் ஒன்றுகூடி கொண்டாடிய அன்னையர் தினம் பலரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரத்த உறவுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து எப்படி  அன்புடன் வலிமையாக வாழலாம் என்பதற்கு சிறந்த முன்னுதாரணம் கங்கையம்மாளின் குடும்பம் என்றால்  அது மிகையாகாது..