கோவிட் இரண்டாவது அலையின் பரவலை தடுக்க தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு நாளை அதிகாலை 4 மணி முதல் அமலுக்கு வரும் நிலையில், சென்னை புறநகர் ரயில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தென்னக ரயில்வே..

நாளை அதிகாலை 4 மணிமுதல் தமிழகத்தில் பேருந்து பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்சி சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே புறநகர் ரயில் சேவையில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணம் செய்யலாம், அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் பணியாளர்கள் மட்டுமே செல்லலாம் என தென்னக ரயில்வே அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் கூடுதலாக தற்போது புறநகர் ரயில் சேவையின் எண்ணிக்கையை குறைத்தும், கட்டுப்பாடுகளை விதித்தும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புறநகர் ரயில் சேவை எண்ணிக்கையில் மாற்றம்

1) சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே - 49 இணை புறநகர் ரயில் சேவைகள் 

2) சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே - 25 இணை புறநகர் ரயில் சேவைகள் 

3) சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே - 20 இணை புறநகர் ரயில் சேவைகள் 

4) சென்னை கடற்கரை - செங்கல்பட்டு/திருமால்பூர் இடையே - 44 இணை புறநகர் ரயில் சேவைகள்

திங்கள் முதல் சனிக்கிழமை வரையிலான வார நாட்களில் 288 புறநகர் ரயில் சேவைகள் மேல் குறிப்பிட்டு உள்ள வழித்தடங்களில் இயக்கப்படும். ஞாயிறு கிழமைகளில் முன்பே அறிவித்தது போல் இதை விட குறைந்த அளவிலான புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

யார் யாரெல்லாம் பயணம் செய்யலாம் ?

மாநில அரசு மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன பணியாளர்கள், நீதித்துறையை சேர்ந்தவர்கள், லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், துறைமுகத்தில் பணிபுரியும் பணியாளர்கள், ஊடகத்துறையை சேர்ந்தவர்கள், தனியார் மற்றும் தேசிய வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்கள், தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் புறநகர்  ரயில் சேவையில் உரிய அடையாள அட்டையுடன் பயணம் செய்யலாம்.

யாரெல்லாம் பயணம் செய்ய அனுமதி கிடையாது ?

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகளுக்கு கீழ் வராத பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் பயணம் செய்ய அனுமதி கிடையாது. பெண் பயணிகள் பயணம் செய்ய வழங்கப்படிருந்த அனுமதியும் ரத்து செய்யப்படுகிறது.

மே 10-ஆம் தேதி முதல் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது, மறு உத்தரவு வரும் வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என தேதி குறிப்பிடாமல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது தென்னக ரயில்வே. ஆக முதல் கொரோனா அலையின்போது நிறுத்தப்பட்டது போல் தமிழகத்தில் இரண்டாவது முறையாக அணைத்து பொது போக்குவரத்து சேவையும் அடுத்த 14 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.