மத்திய உள்துறை செயலாளர் சுற்றறிக்கையின் பேரிலேயே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பாஜக எம்எல்ஏ காந்தி, விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்து பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மத்திய அரசின் உள்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்ததால், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. செயலாளர் சுற்றறிக்கையின் பேரிலேயே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்று விளக்கம் கொடுத்தார். மேலும், ‘வரும் முன் கப்போம்’ என்ற வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை வரவேற்பதாகவும், இதற்கான பயிற்சிகளை விஷ்வ ஹிந்து பரிஷத் கொடுத்து வருவதாகவும் பாஜக எம்எல்ஏ காந்தி பேரவையில் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், பாஜக உறுப்பினர் எம். ஆர். காந்தி பேரவையில் பேசும் பொழுது, இந்துக்களின் முழு முதற்கடவுளாக விளங்கும், ஆண்டாண்டு காலமாக வழிபட்டு வரும் விநாயகர் சதுர்த்தி விழாவை பொது இடங்களில் கொண்டாட வேண்டும் என்றும், பள்ளிக்கூடங்கள் மற்றும் பொது இடங்களில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுவரும் சூழலில் கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போன்று விநாயகர் சதுர்த்தி விழாவும் கட்டுப்பாடுகளுடன் கொண்டாட வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி தான் கட்டுப்பாடுகள் விதிகப்பட்டுள்ளது என கூறினார். ஆனால் தமிழகத்தில் பள்ளிகள், திரையரங்கம், மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதியளிக்க வேண்டும் என மீண்டும் தமிழக அரசுக்கு வலியுறுத்துவதாக கூறினார்.
முன்னதாக, “விநாயகர் சதூர்த்திக்கு அனுமதி கேட்கும் பாஜகவினர், கர்நாடக பாஜக அரசு என்ன செய்கிறது என சொல்லட்டும். மகாராஷ்டிராவில் கொடுத்தது போல் அனுமதி வேண்டும் என தமிழ்நாடு பாஜகவினர் கேட்கிறார்கள். கொரோனாவில் மகாராஷ்டிரா போல தமிழ்நாடு முதலிடத்தில் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள்” என்றும் கூறியிருந்தார்.
அண்டை மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழ்நிலையால், தமிழ்நாட்டில் வருகிற 15.09.2021 வரை கொண்டாடப்படவுள்ள சமய விழாக்களின் கொண்டாட்டத்திற்கு கூடுதல் தடைகளை தமிழ்நாடு அரசு விதித்தது.
‛தமிழ்நாடு முதலிடம் பெற பாஜக விரும்புகிறது’ -அமைச்சர் மா.சு., வஞ்சப்புகழ்ச்சி!