தமிழ்நாட்டில் எந்த கோயில்களிலும் மொட்டை அடிக்க இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
மேலும், மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் கோயில்களில் திருமணம் நடத்த கட்டணம் இல்லை என்றும் அமைச்சர் அறிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை உள்பட 10 இடங்களில் ரூபாய் 150 கோடியில் கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், “சூரிய ஒளி வெப்ப விளக்குகள் தேவைப்படும் அனைத்து கோயில்களிலும் பொருத்தப்படும். சென்னை வடபழனி முருகன் கோயில் இடத்தில் ரூபாய் 2 கோடி செலவில் பன்னோக்கு கட்டடம் கட்டப்படும். வள்ளலாரின் புகழைப் போற்றும் வகையில் வள்ளலார் சர்வதேச மையம் வடலூரில் அமைக்கப்படும். திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூபாய் 150 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ரூபாய் 125 கோடியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும். எட்டுக்குடி, சிக்கல் முருகன் கோயில்களில் ரூ.2.20 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் ஆகிய கோயில்களில் முழுநேர அன்னதான திட்டம் செயல்படுத்தப்படும். செப்டம்பர் 17ஆம் தேதி முதல் காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை முழு நேர அன்னதானத்திட்டம் செயல்படுத்தப்படும். தைத்திருநாளில் அர்ச்சகர்களுக்கு ரூ.10 கோடி செலவில் புத்தாடைகள், கோயில் பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும். திருக்கோயில்களில் தொடர்ந்து 5 ஆண்டுகள் தற்காலிகமாக பணிபுரியும் 1500 பணியாளர்கள் பணி வரன்முறை செய்யப்படுவார்கள்” என்றும் கூறினார்.
முன்னதாக, மத்திய உள்துறை செயலாளர் சுற்றறிக்கையின் பேரிலேயே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பாஜக எம்எல்ஏ காந்தி, விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்து பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மத்திய அரசின் உள்துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்ததால், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. செயலாளர் சுற்றறிக்கையின் பேரிலேயே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்று விளக்கம் கொடுத்தார். மேலும், ‘வரும் முன் கப்போம்’ என்ற வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை வரவேற்பதாகவும், இதற்கான பயிற்சிகளை விஷ்வ ஹிந்து பரிஷத் கொடுத்து வருவதாகவும் பாஜக எம்எல்ஏ காந்தி பேரவையில் கூறினார்.