சென்னை சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை பேசுகையில், தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீட் தேர்வு விலக்கு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சென்றுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு நடக்காது, என முதலமைச்சர் ஸ்டாலின் கூறி வந்தார். ஏழை, எளிய மாணவர்களுக்கு நீட் எதிரானது கிடையாது. 2020-ஆம் ஆண்டு நீட் தேர்வு முடிவுகளை வைத்து பார்க்கும்பொழுது , தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து உள்ளனர்.


முதல் 100 ரேங்கில் தமிழக மாணவர்கள் வந்து உள்ளனர். இந்த வகையில் நீட் தமிழக மாணவர்களுக்கு எதிரானது என்பது கிடையாது.  நீதியரசர் கமிட்டியில் கூட 2016-ஆம் ஆண்டு முதல் கூடிய புள்ளி விவரங்கள், 2017-18-ஆம் ஆண்டு நீட் தேர்வில் சில பிரச்சனைகள் இருந்தன, ஆனால் தற்போது அப்பிரச்சினை இல்லை. 2020-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடாக வழங்கப்பட்டு உள்ளது. நீட் விலக்கு கோரிக்கையை அமைச்சர் கைவிட வேண்டும், 10 நாளில் நடக்க உள்ள நீட் தேர்வை நல்ல முறையில் நடத்த தமிழக அரசு துணை நிற்க வேண்டும். இதுதான் காலத்தின் கட்டாயமாகும். கடந்த ஆண்டு நீட் தேர்வில் 180 கேள்விகளில் 173 தமிழக பாடத்தில் இருந்து வந்து இருந்தது. அதுபோல் தான் இந்தாண்டும் இருக்கும். இதற்கு மாநில அரசு துணை நிற்க வேண்டும்.


செங்கலை வைத்து அரசியலை ஆரம்பித்தவர் தற்பொழுது, காம்போண்ட்டை வைத்து அரசியல் செய்கிறார். நடப்பு ஆண்டு முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில், மாணவர்கள் சேர்த்து தொடங்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. எய்ம்ஸ் முழுமையாக கட்டிமுடித்த பின்தான், தொடங்க முடியும் என கூறுவது மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு எதிரான திமுக செயல்பட்டு வருகிறது. பெரிய கல்வி நிறுவனங்கள் கட்டி முடிக்கும் முன்பே தொடங்கப்பட்டு உள்ளன. கட்டிட  பணிகளுக்காக 1 அல்லது 2 வருடம் தடை செய்வது என்பது கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்க கூடிய வாய்ப்பு நிலுவிவிடும். அரசியலை விட்டு மதுரையில் மருத்துவ படிக்க வாய்ப்பு கிடைத்தால், ஏற்று கொள்ள வேண்டும். அரசியல் செய்யாமல் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும்.


விநாயகர் சதுர்த்தி விழாவில் பா.ஜ.க. நிலைப்பாடு தெளிவாக உள்ளது. கட்டுப்பாடுகளை போடுவதற்கு அரசுக்கு உரிமை உள்ளது. தமிழகத்தில் 2-வது அலை கட்டுக்குள் வந்து உள்ளது. 3-வது அலைக்கான எந்த சாத்திய கூறுகளும் தென்படவில்லை. அப்படி  இருக்கும் விநாயகர் சதுர்த்தியை அனுமதிக்க மாட்டோம் என கூறுவது ஏற்புடையது கிடையாது. விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்கள், அமைப்பாளர்கள், அமைப்புகள் யாரையும் அழைத்து பேசாமல் ஏசி அறையில் அமர்ந்து போடும் உத்தரவை ஏற்க முடியாது. கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி நடத்த அனுமதிக்க வேண்டும். கட்டுப்பாட்டை மீறினால் அமைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.


மராட்டியத்தில் தமிழகத்தை விட பாதிப்பு அதிகமாக இருந்தாலும் கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளிக்கும்பொழுது , தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுப்பது ஏன் என்று தெரியவில்லை. இன்னும் காலம் இருக்கிறது தமிழக அரசு மறுபரிசீலனை செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்