இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் என இரு நிறுவனங்கள் மட்டுமே இப்போதுவரை தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டிருக்கின்றன. இந்த இரு நிறுவனங்களும் 2021 ஏப்ரல் நிலவரப்படி ஒரு கோடி தடுப்பூசிகள் தயாரித்திருக்கின்றன. மத்திய அரசு தற்போது ஆத்மநிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் தடுப்பூசி தயாரிக்க மேலும் மூன்று பொதுத்துறை நிறுவனங்களுக்கு தற்போது அனுமதி வழங்கியிருக்கிறது. இதனால் இந்தியாவில் வரும் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் 7 கோடி தடுப்பூசிகளும், செப்டம்பர் மாதத்தில் 10 கோடி தடுப்பூசிகளும் தயாரிக்க முடியும் எனவும் கணக்கிடப்படுகிறது. இந்தியா கணிசமான அளவு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதும் குறிப்பிடத்தக்கது.
தற்போதைய வேகத்தில் இந்தியாவில் தடுப்பூசிகளைப் போடப்பட்டால் கூட, 70 சதவிகிதத்தை எட்டிவிட முடியுமா என மருத்துவர்களும், நிபுணர்களும் அச்சம் தெரிவிக்கும் இந்த வேளையில், இரண்டாவது அலையில், நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில், தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதாகவும் அதனால் தான் குறைவானவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது என்ற குற்றச்சாட்டு வலுத்தது. ஆக்சிஜன் குறைபாடு, படுக்கை குறைபாடு என சுகாதாரச் சிக்கல்களால், திட்டமின்மையால், விழிப்புணர்வு குறைவால் நாடு சொல்லமுடியாத துயரங்களைச் சந்திக்கும் இந்த வேளையில், தடுப்பூசிகள் குறித்த அச்சமும், அதன் நம்பகத்தன்மையும் ஒரு புறம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது? நாடெங்கிலும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருகின்ற 1 மே தொடங்கி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது. இந்நிலையில், தடுப்பூசி குறித்து எழும் மிகச்சிறிய சந்தேகத்துக்கும் பதில்களை பெற்று அளிக்கவேண்டிய முழு பொறுப்பும் அரசையும், ஊடகங்களையும் சார்ந்திருக்கிறது. அந்த வேலையை தொடர்ச்சியாக செய்ய இருக்கிறோம். இந்தப் பகுதியில் நேரடியான கேள்விகளுக்கு, எளிமையான நேரடியான பதில்களை அளிக்கிறார் தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைப் பிரிவின் முன்னாள் தலைவரான மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப்.
- இரண்டு டோஸ்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டபிறகும் மாஸ்க் போடுவது அவசியமா?
தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.
- கோவிட் தடுப்பூசியின் பலன் எத்தனை நாளைக்கு இருக்கும்?
சுமார் 10 மாதங்கள் முதல் 1 வருடம் வரை உடலில் தடுப்பூசியின் தாக்கம் இருக்கும் என இதுவரை நிகழ்ந்த ஆய்வுகளின் வழியாக சொல்லப்படுகிறது.
- கருவுற்றிருப்பவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?
தற்போது கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி கொடுப்பதில்லை. காரணம் இதுவரை அவர்களிடம் தடுப்பூசி பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை.
- முதல் டோஸ் தடுப்பூசி மட்டும் போட்டுக்கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு வருமா?
வரலாம். ஆனால் அப்படிப் போட்டுக்கொண்டவர்களில் குறைவான எண்ணிக்கையிலேயே பாதிக்கப்படுகிறார்கள்.
(சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி கோவிஷீல்ட் தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்களில் 0.02 சதவிகிதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இரண்டாவது டோஸூம் போட்டு முடித்தவர்களில் 0.03 சதவிகிதம் பேரில் கொரோனா பாதிப்பு தென்பட்டுள்ளது. கோவாக்ஸின் போட்டுக்கொண்டவர்களில் முதல் டோஸ் செலுத்திய பிறகு 0.04 சதவிகிதம் பேர் இரண்டாவது டோஸ் செலுத்திய பிறகு 0.04 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் - தகவல்: மத்திய சுகாதாரத்துறை)
- எனக்கான தடுப்பூசியை நான் தேர்ந்தெடுக்கலாமா? இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் எது மிகவும் வீரியமாகச் செயலாற்றுகிறது?
கோவிஷீல்ட் கோவாக்சின் என இரண்டுமே நம் உடலில் ஒரே அளவில்தான் செயல்படுகின்றன. அதனால் எந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளலாம்.
- பிற உடல் உபாதைகள் இருப்பவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?
தாராளமாகப் போட்டுக்கொள்ளலாம். அப்படி பாதிக்கப்பட்டவர்கள் தங்களது தயக்கத்தைப் போக்கிக்கொள்ளக் குடும்ப மருத்துவரிடமும் ஒருமுறை ஆலோசிப்பது நல்லது.
- தடுப்பூசி போடுவதற்கு முன்பு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவைப் பரிசோதிக்க வேண்டுமா?
பரிசோதிக்கத் தேவையில்லை.
- கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் தடுப்பூசி போடுவது அவசியமா?
போட்டுக்கொள்வது நல்லது. பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் 3 மாத காலத்துக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது.
- தடுப்பூசி போட்டுக்கொள்வதால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும்?
இதுவரைப் பெரிதாகப் பக்கவிளைவுகள் எதுவும் இல்லை. சிலருக்கு அரிப்பு ஏற்படலாம்.
- நாம் போட்டுக்கொள்ளும் ஒரு தடுப்பூசியின் நிர்ணயிக்கப்பட்ட விலை எவ்வளவு?
தற்போதைய நிலவரப்படி நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ.150/-
Also Read : வெளிமாநிலத்திற்கு அனுப்பப்படும் தமிழக ஆக்ஸிஜன்: தமிழகத்தில் தட்டுப்பாடு வாய்ப்பு?