சென்னையின் ஸ்ரீபெரும்பபுதூரில் தயாராகும் திரவ ஆக்ஸிஜனை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்திற்கு திருப்பிவிட மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா தொற்றின் அளவு தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சென்னை ஸ்ரீபெரும்பதூரில் தயாராகும் சுமார் 45 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் பிற மாநிலங்களுக்கு (ஆந்திரா மற்றும் தெலுங்கானா) திருப்பி விடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் தினசரி கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில் ஒரு நாளுக்கு சராசரியாக 200 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தமிழகத்திற்கு தேவைப்படும் இந்த நேரத்தில், மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்காமல் இந்த முடிவினை மத்திய சுகாதார அமைச்சகம் எடுத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் திரு. விஜய பாஸ்கர் நாளிதழ் ஒன்றில் கூறியுள்ளார். அதே சமயம், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழகத்திற்கு ஏப்ரல் 20ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் ஆக்ஸிஜனின் அளவு 200 மெட்ரிக் டன்னில் இருந்து 300 மெட்ரிக் டன்னாகவும். அதன் பிறகு ஏப்ரல் மாதம் இறுதிக்குள் 465 மெட்ரிக் டன்னாகவும் வழங்கவேண்டும். இந்த அளவில் தான் பிற மாநிலங்களுக்கும் ஆக்ஸிஜன் பங்கீடு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முறையே தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்கள் தற்போது 320 மெட்ரிக் டன் அளவிற்கு தங்களுடைய பங்கினை பெற்றுவரும் நிலையில், தமிழகத்திற்கு மட்டும் இன்னும் 200 என்ற அளவிலேயே ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகின்றது.
நாடு முழுவதும் கொரோனா அச்சம் மக்களை சூழ்ந்து வரும் இந்த இக்கட்டான நிலையில் இதுபோன்ற தட்டுப்பாடுகள் மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தி வருகின்றது. ஏற்கனவே தலைநகர் டெல்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவி வருகின்றது. மேலும் மத்திய அரசு டெல்லியில் நிலவும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை தீர்க்குமாறு கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் 11 ஆயிரத்தை கொரோனா தொற்று நெருங்கி வரும் நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படும் நிலை வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் சென்னையிலும் தொற்றின் அளவு தினமும் 3 ஆயிரத்தை தாண்டிவருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நாளிதழ் பேட்டியில் கூறியபோது, ‛2020ம் ஆண்டு கொரோனாவால் நிலவிய நெருக்கடி நிலையிலும் நாங்கள் பிற மாநிலங்களுக்கு உதவினோம். ஆனால் மத்திய அரசு தற்போது இங்கு நிலவும் இக்கட்டான சூழலில் ஆக்ஸிஜனை வேறு மாநிலத்திற்கு அனுப்புவது குறித்து மத்திய சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்,’ எனக்கூறியுள்ளார்.