தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இவர் நீண்ட நெடிய அரசியல் பயண வரலாற்றை கொண்டவர். அண்ணாவின் மறைவிற்கு பிறகு திமுக கட்சியின் சட்டமன்ற தலைவராக 1969ஆம் ஆண்டு கருணாநிதி தேர்வு செய்யப்பட்டார். 1969ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது 45ஆவது வயதில் முதலமைச்சராக பதவி ஏற்றார். இவர் மொத்தமாக 18 ஆண்டுகாலம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியில் இருந்தார். தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் இப்பதவியில் இருந்தார். அரசியல் தவிர இவர் எழுத்து,சினிமா திரைக்கதை வசனம் மற்றும் பாடல்கள் எழுதுவது என பல கலைகள் வித்தகராக இருந்தார். கருணாநிதியின் எழுத்து இன்றும் என்றும் பேசப்படும்.
அந்தவகையில் கலைஞர் கருணாநிதி எழுதிய சிறப்பான 5 திரைப்பட பாடல்கள் என்னென்ன?
வெல்க நாடு:
1963ஆம் ஆண்டு வெளிவந்த காஞ்சி தலைவன் என்ற திரைப்படத்தில் வெல்க நாடு என்ற பாடல் இடம்பெற்று இருக்கும். இந்தப் பாடலை கலைஞர் கருணாநிதி எழுதியிருப்பார். இப்பாடலுக்கு கே.வி.மகாதேவன் இசையமைத்திருப்பார். இந்தப் பாடல் வரிகள் மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும்.
வாழ்க்கை எனும் ஓடம்:
1964ஆம் ஆண்டு வெளிவந்த பூம்புகார் திரைப்படத்திற்கு கதை, வசனம் மற்றும் பாடல்களை கருணாநிதி எழுதியிருந்தார். இப்படத்தில் வாழ்க்கை எனும் ஓடம் பாடல் ஒரு சிறப்பாக தத்துவ பாடலாக அமைந்திருக்கும். இதை திரையில் கே.பி.சுந்தரம்பாள் சிறப்பாக பாடி நடித்திருப்பார்.
ஒரே இரத்தம்:
1987ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஒரே இரத்தம். இந்தத் திரைப்படத்தில் தற்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடித்திருப்பார். இப்படத்தில் கருணாநிதி இரண்டு பாடல்களை எழுதியிருப்பார். ஒன்று ஒரே இரத்தம் மற்றும் ஒரு போராளியின் பயணம். இதில் ஒரே இரத்தம் பாடல் சிறப்பாக இருக்கும்.
சுருலு மீசை:
1987 ஆம் ஆண்டு விஜய்காந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் வீரன் வேலு தம்பி. இந்தப் படத்தில் கருணாநிதி சுருலு மீசை காரண்டி வேலு தம்பி என்ற பாடலை எழுதியிருப்பார். இந்தப் பாடலுக்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருப்பார்.
ஆஹா வீணையில்:
2010ஆம் ஆண்டு வெளிவந்த 'பெண் சிங்கம்' திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருப்பார். இந்தத் திரைப்படத்திற்கு கலைஞர் கருணாநிதி வசனம் எழுதியிருப்பார். அத்துடன் இப்படத்தில் ஆஹா வீணையில் என்ற பாடலை எழுதியிருப்பார். இந்தப் பாடல் வரிகள் மிகவும் அழகாக இருக்கும்.
இவை தவிர கலைஞர் கருணாநிதி பல திரைப்படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். இத்தகைய சிறப்பு மிக்க கலைஞர் நம்மை விட்டு மறைந்திருந்தாலும் அவருடைய பாடல் வரிகள் திரைப்படங்கள் பல ஆண்டு காலம் நம்முடன் வாழும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.
மேலும் படிக்க: கலையும், காதலும் சேர்ந்த வலி சலங்கை ஒலி! 39வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அழகிய படைப்பு!