காதலில் தோற்றவனை கூட கொண்டாடும் இந்த உலகம், கலையில் தோற்றவனை ஏனோ கண்டுகொள்வதில்லை. அப்படிப்பட்ட ஒருவனின் உள்ளக் குமுறலையும், கலை ஏக்கத்தையும் கச்சிதமாக காட்டிய படம் தான் சலங்கை ஒலி. எப்படி இப்படி ஒரு கதை தோன்றியது இயக்குனர் கே.விஸ்வநாத்திற்கு. ஆமாம்… லிங்காவில் அனுஷ்கா தாத்தாவாக வருவாரே அதே விஸ்வநாத் தான். சாகர சங்கம் என்கிற தெலுங்கு படத்தின் மொழி பெயர்ப்பு தான் சலங்கை ஒலி. ஆனால் அது மொழி பெயர்ப்பு என்பது இன்றும் பலருக்கு தெரியாது. அந்த அளவிற்கு நேர்த்தியான படைப்பு. 1983 ஜூன் 3 இதே நாளில் வெளியானது சலங்கை ஒலி. கிட்டத்தட்ட 38 ஆண்டுகளை கடக்கிறது. ஆனாலும் சலங்கையின் ஒலி இன்னும் காதுகளில் ஒலிக்கிறது.
இது தான் சலங்கை ஒலி!
தனது 29வது வயதில் 60 வயதான முதியவராக கமல் ஏற்ற கதாபாத்திரம் தான் சலங்கை ஒலியின் ஜீவன். எளிய குடும்பத்தில் பிறந்த கமலுக்கு நடனம் மீது காதல். அதனாலேயே அவருக்கு வாய்ப்புகள் கானலாகிறது. உதவிக்கு வந்த காதலும் கைகூடவில்லை. கலையும் போச்சு, காதலும் போச்சு… மதுபானத்தோடு புதுவானத்தை இழந்த பறவையாக வாழ்கிறார். கலை விமர்சகராக இதழ் ஒன்றில் பணியாற்றும் கமல், ஒரு பெண்ணின் நடனத்தை விமர்சிக்க, அது மாஜி காதலியின் மகள் என தெரிகிறது. அதன் பின் அடுத்தடுத்து நகரும் கதைக்களத்தில், பெண்ணுக்கு நடனம் கற்றுக்கொடுத்து அரங்கேற்றம் செய்ய வைத்து, அவளுக்கு கிடைக்கும் கைத்தட்டல்களுடன் கமல் கண்ணை மூடுவது தான் சலங்கை ஒலி.
இந்த பிளே லிஸ்ட் இல்லாமல் இசை இல்லை!
80களில் ஆடியோ கேசட்டுகள் அதிகம் பிரபலம் இல்லாத காலம். ரேடியோக்களும், இசைதட்டுகளும் மட்டுமே இசைப்பிரியர்களை மகிழ்வித்த காலத்தில் சலங்கை ஒலியின், அத்தனை பாடல்களும் இசைஞானியின் இசையில் சூப்பர் டூப்பர் ஹிட்.
‛மவுனமான நேரம்… இளம் மனதில் என்ன பாரம்….’ என்கிற பாடலை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா… எஸ்.பி.பி.,-ஜானகியின் அந்த டூயட், கோரப்பசியில் கொய்யாப்பழம் கிடைத்ததை போன்ற உணர்வை தரும்.
‛நாத வினோதங்கள்….’ என்கிற எஸ்.பி.பி., எஸ்.பி.சைலஜா பாடிய பாடல், இன்றும் பள்ளி, கல்லூரிகளில் துவக்க பாடலாக இடம் பெற்றிருக்கும். முதல் மரியாதை பாடல் என அதற்கு பட்டமும் உண்டு.
‛ஓம்… நமச்சிவாயா…’ பாடலும் அதே போல தான், மேடைகளில் முதன்மை பாடலாக இடம்பெறும். ஜானகியின் குரல், பரதத்தை செவியில் அரங்கேற்றும்.
‛தகிட தகிட… தகிட… தந்தானா…’ என்கிற எஸ்.பி.பி.,யின் பாடலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கிணற்றில் மீது மது போதையில் கமல் ஆடும் அந்த பாடல், ஒருவனின் வலியை அப்படியே கடத்தியிருக்கும்.
‛வான் போலே வண்ணம் கொண்டு…’ என்கிற எஸ்.பி.பி., எஸ்.பி.சைலஜாவின் பாடல், எத்தனை முறை உண்டாலும் திகட்டாத தேன் மிட்டாய் ரகம்.
வைத்த கண் வாங்காமல் ரசிக்க வைத்த ஜெயப்பிரதா!
இப்படி ஒவ்வொரு பாடல்களும் கவிப்பேரசு வைரமுத்துவின் வரிகளில் வளம் சேர்த்திருக்கும். இளைஞனாகவும், நரையோடும் கமல் அவ்வளவு அழகு. நாயகி ஜெயப்பிரதாவை சொல்ல வேண்டுமானால், வைத்த கண் வாங்காமல் ரசிக்கும் அழகு. காட்சிப்படுத்தப்பட்ட விதமும் அப்படியே! புடவையில் புதுமலராக மலர்ந்திருப்பார். பாடல்களில் மணம் வீசியிருப்பார். சலங்கையின் முக்கியமான முத்து அவர். இவர்களை தவிர, சரத்பாபு, எஸ்.பி.சைலஜா, சாஹ்சி ரங்கராவ், டப்பிங் ஜானகி, சக்ரி டோலட்டி., மஞ்சு பார்கவி, கீதா என குறைந்த நட்சத்திர பட்டாளங்கள் தான். ஆனால் நிறைவான நடிப்பு இருக்கும். தோற்றவன் ஜெயிப்பான், அல்லது ஜெயிக்க முடியாமல் இறப்பான் என்பதை கடந்து, ஜெயிக்க வைத்து திருப்தியுடன் இறப்பான் என்கிற புதுவித கோணத்தில் கதை அமைந்திருக்கும்.
அள்ளிக் குவித்த விருதுகள்!
*1984ல் 31வது தேசிய திரைப்பட விருதில் இசை, பின்னணி பாடகர் என இரு விருதுகளை பெற்றது சலங்கை ஒலி.
*1983ல் நந்தி விருதில் சிறந்த திரைப்படத்திற்கான வெண்கலம், சிறந்த நடிகர், சிறந்த பெண் பின்னணி பாடகர், சிறந்த கலை இயக்குனர், சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த ஒலி அமைப்பாளர் என விருதுளை அள்ளியது.
*1984ல் 31வது தென்னிந்திய பிலிம்பேர் விருதில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர் விருதுகளை பெற்றது.
*இந்த படத்தின் பாடல்களை பாடியும், ஆடியும், பலர் மேடைகளில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளனர். இன்றும் பெற்று வருகின்றனர்.
30வது ஆண்டில் சேரன் பாண்டியன்! சுவரை உடைத்து ஜாதியை தகர்த்த 90's கிட்ஸின் பேவரிட்!
சலங்கையை வார்த்தவர்கள்!
இயக்குனர்- கே.விஸ்வநாத்
தயாரிப்பு: நாகேஸ்வரராவ்
கதை கே.விஸ்வநாத்
இசை: இளையராஜா
ஒளிப்பதிவு: பி.எஸ்.நிவாஸ்
படத்தொகுப்பு: ஜி.ஜி.கிருஷ்ணாராவ்
நான்… ராஜா சார்… அப்புறம் அந்த வாழைப்பழம்! இசைஞானியின் இந்த முகம் தெரியுமா!
சிலவற்றை திரும்பிப் பார்க்கும் போது அது ஏதோ ஒரு உணர்வை தரும். சலங்கை ஒலியும் அப்படி தான் ஒரு உணர்வை தருகிறது. ஜோல்னா பையோடு காலணா இல்லாமல் சுற்றி வரும் பாலுவை இத்தனை ஆண்டுகளுக்கு பின் தூசு தட்டும் போது தும்மல் வரவில்லை, கண்ணீர் தான் வருகிறது. காதலுக்கும் கலைக்கும் கண்ணீர் தானே மொழி!
55 ஆண்டுகளுக்கு முன் ஊடக அறம் பேசிய எம்.ஜி.ஆர்.,! ஏன் உதயமானது சந்திரோதயம்?