சமீபத்தில் மிக்ஜாம் புயலின் காரணமாக பெய்த மழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் சென்னையை சேர்ந்த தேவநேயன் அரசு என்ற நபர் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் தொலைப்பேசி வாயிலாக வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி:
அவர் பதிவிட்டுள்ளதாவது, ”நேற்றைய முன்தினம் விளையாட்டுத்துறை மற்றும் சிறப்புப்பணிகள் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் குடியிருப்பு பகுதிகளின் வெள்ள பாதிப்புகளைப் பற்றி விரிவாக என்னிடம் தொலைபேசி வழியாக கேட்டறிந்தார். உடனடியாக என்னென்ன செய்ய வேண்டும் என்பதை விரிவாகக் கூறினேன். இடமாற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சிறப்பு அலுவலர் உடனே நியமிக்க வேண்டும் என்றேன். அன்று மாலையே அதற்கான சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டார். மருத்துவ முகாம்கள் வீடு தேடி செல்ல வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தேன்.
இன்று முதல் அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரண பொருட்களை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தேன். இன்று முதல் 6000 மேற்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்கள் அவரின் கட்சி சார்பாக வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்களுக்கு பல்வேறு சிறப்பு முயற்சிகளை உடனே எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.
நாளை முதல் அதை தொடங்க உள்ளார்கள் என்பதையும் அறிந்தேன். இந்த எளியோன் வைத்த வேண்டுகோள்களை உடனடியாக செயல்படுத்திக் கொண்டும் மற்றும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கும் அமைச்சர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளை செம்மஞ்சேரி குடியிருப்புப்பகுதி மக்கள் சார்பாகவும் சமூக அமைப்புகளின் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Lok Sabha Security Breach: கையில் புகை குண்டு.. நாடாளுமன்றத்தில் அத்துமீறிய நபர்களால் பரபரப்பு.. என்ன நடந்தது..?