புஸ்வானம் வெடித்து விபத்து ஏற்பட்ட வழக்கில் அய்யன் பட்டாசு நிறுவனம் ரயில்வே ஊழியருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

 

 

 

வெடித்த புஸ்வானத்தால் தீக்காயம்: 


திருவாரூர் மாவட்டம் திருக்கரவாசல் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் தென்னக ரயில்வேயில் டிக்கெட் பரிசோதராக திருவாரூர் ரயில் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 05.10.2021 மற்றும் 30.10.2021 ஆகிய தேதிகளில் திருவாரூரில் உள்ள ஆனந்த் வெடிக்கடையில் 16,275 ரூபாய்க்கு தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் சிறப்பாக கொண்டாட வேண்டி பட்டாசுகளை வாங்கியுள்ளார்.

 

இதனையடுத்து கடந்த 04.11.2021 அன்று தீபாவளி பண்டிகை நாளில் தனது குழந்தைகளை மகிழ்வதற்காக அயன் பட்டாசு நிறுவனத்தின் தயாரிப்பான BUNNY பிராண்ட் புஸ் வானத்தை பூத்திரியை கொண்டு பற்ற வைத்த போது அது திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் ஆனந்தின் கை கால்கள் முகம் மற்றும் தலை ஆகியவற்றில் தீக்காயங்கள் ஏற்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.அதனைத் தொடர்ந்து திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி(COLLAGEN SHEET APPLICATION)செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கை விரல்களில் K-WIRE என்கிற அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.



 

நோட்டீஸ்:


இதனையடுத்து ஆனந்த் திருவாரூர் ஆனந்த் வெடிக் கடையை அணுகி தனக்கேற்பட்ட பாதிப்பு பற்றி கேட்டபோது பட்டாசுகளை விற்பனை செய்வது மட்டும்தான் தங்களுடைய வேலை என்றும் உற்பத்தி நிறுவனத்தை தான் கேட்க வேண்டும் என்று பதில் கூறியதால், மன வேதனை அடைந்து மீதமுள்ள பட்டாசை திருப்பிக் கொடுத்ததற்கு அதற்கு உண்டான பாதி தொகையை வெடிக்கடையினர் கொடுத்துள்ளனர். மேலும் இது குறித்து ஆனந்த் கடந்த 12.01.2022 ல் வழக்கறிஞர் மூலம் சம்பந்தப்பட்ட வெடி கடைக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் கேட்டதற்கு உண்மைக்கு புறம்பாக பதில்  கொடுத்ததாக கூறப்படுகிறது.

 

25 லட்சம் இழப்பீடு:


மேலும் இந்த விபத்தின் காரணமாக ஆனந்த் 4 மாதங்கள் பணிக்கு செல்ல முடியாதததற்கான மருத்துவச் சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் தனக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி கடந்த 27.02.2023 அன்று திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய மாவட்ட நுகர்வோர் குறைதீர ஆணைய நீதிபதி சேகர் மற்றும் உறுப்பினர் லட்சுமணன் அடங்கிய அமர்வு சிறுவர்கள் கொளுத்தக் கூடிய தயாரிப்பான புஸ்வானம்  இயற்கைக்கு மாறாக வெடித்ததால் கை முகம் தலை ஆகியவற்றில் புகார்தாரருக்கு கொடுங்காயம் ஏற்பட்டுள்ளது.



 

மேலும் எதிர் தரப்பினர்கள் தவறான வணிக நோக்கத்தோடு செயல்பட்டதை அறிய முடிகிறது. எனவே புகார்தாரர் கோரியுள்ள பரிகாரம் கிடைக்க கூடியதாகும். எனவே புகார்தாரரின் காயத்திற்கும் மன உளைச்சலுக்காகவும் திருவாரூர் ஆனந்த் வெடிக்கடை உரிமையாளர் 5 லட்ச ரூபாய் இழப்பீடும் சிவகாசி சண்முக சாலையில் இயங்கி வரும் அய்யன் வெடி தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்  உரிமையாளர் 20 லட்ச ரூபாய் இழப்பீடும் வழக்கு செலவு தொகையாக இருவரும் சேர்ந்து பத்தாயிரம் ரூபாயும் மருத்துவ செலவு தொகையாக ஒரு லட்சத்து 50,000 ரூபாயை அய்யன் பட்டாசு உரிமையாளர் வழங்கிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் வழக்கு தாக்கலான நாள் முதல் 9 சதவீத வட்டியுடன் ஒரு மாத காலத்திற்குள் இந்த தொகையினை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.