வண்ணத்தை உமிழும் கண்ணீர் புகை குண்டுகளுடன் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற இருவரால் மக்களைவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறிய இருவரும் வண்ணத்தை உமிழும் பொருளை வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து தடை செய்யப்பட்ட பொருட்களுடன் மக்களவையில் நுழைய முயன்ற இருவரையும் காவலர்கள் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 


நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான இன்று நடந்த அத்துமீறல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவியது. மக்களவையில் நுழைந்த இருவரும் “சர்வாதிகாரம் கூடாது” என முழக்கமிட்டப்படி, மக்களவை பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்து மேஜை மீது தாவி ஓடிய நபர்களை சக எம்பிக்கள் மடக்கி பிடித்தனர். இதை தொடர்ந்து, அவை தலைவர் ராஜேந்திர அகர்வால் உடனடியாக அமர்வை ஒத்திவைத்தார்.  






காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறுகையில், "திடீரென்று 20 வயதுடைய இரு இளைஞர்கள் பார்வையாளர்கள் கேலரியில் இருந்து சபைக்குள் குதித்து கையில் டப்பாகளை வைத்திருந்தனர். இந்த டப்பாக்கள் மஞ்சள் புகையை உமிழ்ந்தன. அவர்களில் ஒருவர் சபாநாயகர் நாற்காலியை நோக்கி ஓட முயன்றார். அந்த இருவரும் “சர்வாதிகாரம் கூடாது” என சில கோஷங்களை முழங்கினர். இது 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் தாக்கப்பட்ட டிசம்பர் 13 ம் தேதியான இன்று, மீண்டும் இப்படி ஒரு செயல் நடந்திருப்பது கடுமையான பாதுகாப்பு மீறலாகும்.” என தெரிவித்துள்ளார். 


மக்களவையில் ஊடுருவியர்கள் யார்? காவல்துறை தரப்பில் என்ன சொன்னார்கள்..? 


மக்களவைக்குள் ஊடுருவியர்கள் யார் என்பது இன்னும் அடையாளம் தெரியவில்லை. இதுகுறித்து, நாடாளுமன்றமும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. முதற்கட்ட விசாரணையில், “குற்றம் சாட்டப்பட்ட இருவரில் ஒருவரின் பெயர் சாகர், மற்றவரைப் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவர்கள் காலணியில் மறைத்து புகை குண்டுகளை கொண்டு வந்துள்ளனர்.” என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 






நாடாளுமன்றத்திற்கு வெளியே போராடிய இரண்டு பெண்கள் கைது: 


நாடாளுமன்றத்தின் வெளியே வண்ணத்தை உமிழும் பொருளுடன் போராட்டம் நடத்திய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, மக்களவையில் அத்துமீறிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுடன் வந்த இரு பெண்களும் பிடிபட்டனர். கைது செய்யப்பட்ட பெண்களான நீலம், அன்மோல் ஷிண்டே என்ற இரு பெண்களிடம் டெல்லி காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்களவையில் இருவர் அத்துமீறி நுழைந்தது பாதுகாப்பு தோல்வியை காட்டுகிறது என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி குற்றம் சாட்டினார்.