விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில், சர்வதேச சிறுதானிய உணவு திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி துவக்கி வைத்து, சிறுதானிய உணவு பார்வையிட்டார்.
மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் சபை 2023-ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்தது. அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு பொது மக்களாகிய நுகர்வோர்களிடையே பாரம்பரிய உணவான சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் சிறுதானிய உணவுத் திருவிழா நடத்திட அறிவுறுத்தப்பட்டது. அதன்படி நேற்றையதினம் சர்வதேச சிறுதானிய உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சி அரங்குகள் துவக்கி வைத்து பார்வையிடப்பட்டது.
சிறுதானிய உணவின் நன்மை
இக்கண்காட்சியில் சிறுதானிய உணவின் நன்மைகள், பலன்கள் குறித்த விவரங்களுடன் சிறுதானிய உணவுகளை சிறப்பாக தயார் செய்து உரிய குறிப்புகளுடன் பொதுமக்களாகிய நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசுத்துறைகள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் செயல்படும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் ஆகிய அமைப்புகளால் 15-க்கும் மேற்பட்ட அரங்குகள் காட்சிப்படுத்தப்பட்டது.
இக்கண்காட்சியில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், நுகர்வோர் பாதுகாப்புத்துறை, மகளிர் திட்டம், பள்ளிக்கல்வித்துறை, வேளாண்மைத்துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை, உணவு பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு, சிறுதானிய உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த அரங்குகளில், குதிரைவாலி, சாமை, கருப்பு கவுனி அரிசி, வரகு, பனிவரகு வெண்பொங்கல், பனிவரகு அப்பம், பனிவரகு வாழைப் பூ வடை, பனிவரகு கிச்சடி, தினைப் பனியாரம், தினை பொங்கல், தினை அடை, தினை கிச்சடி, தினை லட்டு உள்ளிட்ட பல்வேறு சிறுதானிய உணவுகள் கண்காட்சி அரங்குகளில் வைக்கப்பட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சிறுதானியத்தின் பயன்களை அறிந்தே ஒவ்வொரு அங்கன்வாடி மையத்திலும், சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவுகளையே குழந்தைகளுக்கு வழங்குவதால், குழந்தைகள் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் உள்ளனர். எனவே, பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு சிறுதானிய உணவுகளை நாள்தோறும் கட்டாயம் வழங்கிட வேண்டும்.
இந்த சிறுதானிய உணவுகளின் மூலம் வைட்டமின்-பி, கால்சியம், புரதம், இரும்புசத்து, எலும்பு மற்றும் பற்கள் வழுவடையும் இரும்பு சத்து, கால்சியம், நார்சத்து, புரோட்டீன், மெக்னீசியம் உள்ளிட்ட பல்வேறு சத்துகள் சிறுதானிய உணவுகளில் கிடைக்கிறது. சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவுகளை உண்பதால் நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் வராமல் தடுக்கலாம். மேலும், இந்த உணவு வகைகள் உடல் இயக்கத்திற்கு வலு சேர்க்க உதவுகிறது. எனவே அனைவரும் சிறுதானிய உணவுகளின் பயன்களை நன்கு அறிந்துகொண்டு பயன்படுத்தி, அதனை மற்றவர்களுக்கும் எடுத்துகூற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
சிறுதானிய உணவுகள் சிறப்பு குறித்து விழிப்புணர்வு
தொடர்ந்து, சிறுதானிய உணவுகள் சிறப்பு குறித்து விழிப்புணர்வு உரையாற்றிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி, வழங்கினார். மேலும், சிறுதானிய உணவு அரங்கில் வைக்கப்பட்ட பல்வேறு சிறுதானிய உணவு வகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி அவர்கள் சுவைத்து பார்த்து, ஆய்வு செய்தார்.