தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் நிறைவடையும் நிலையில் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்ல ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 


மத்திய அரசு மீன்வளம் பாதுகாப்பு, மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையிலான 61 நாட்கள் இந்த தடைக்காலம் அமலில் இருப்பது வழக்கம்.




அந்த வகையில் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் தற்போது இந்த மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக ஆழ்கடல் மீன் பிடி விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த காலக்கட்டத்தில் மீன்களின் விலை தாறுமாறாக உயர்ந்தது. 


மேலும் 14 மாவட்டங்களில் சுமார் 15 ஆயிரம் படகுகள் ஆழ்கடலுக்குள் செல்லாமல் உள்ள நிலையில் நாளையுடன் மீன்பிடி தடைக்காலம் முடிவடைகிறது. இதனால் நாளை நள்ளிரவு முதல் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல உள்ளனர். அதற்கான ஆயத்தப் பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவாக  மீனவர்கள் இந்த தடைக்காலத்தின் தான் படகுகளில் ஏற்பட்ட பழுதுகளை சரி செய்வது, வர்ணம் பூசுவது, வலைகளை பராமரிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள். 


அதன்படி தற்போது இந்த பணிகள் நிறைவுப்பெற்று படகுகளும், வலைகளும் புதுப்பொலிவுப் பெற்றுள்ளது. இன்றும் இதற்கான பணிகள் நடைபெறவுள்ள நிலையில் நீண்ட நாட்களுக்குப் பின் ஆழ்கடலுக்குள் சென்றால் நிச்சயம் நிறைய மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மீனவர்கள் காத்திருக்கின்றனர். இதனால் மீன்களின் விலை வரப்போகும் நாட்களில் குறையும் என கூறப்படுகிறது. இதற்கிடையில் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ள நாட்களில் விசைப்படகுகளில் ஆய்வு நடைபெறுவது வழக்கம். 


இந்தாண்டும் மீன்பிடி விசை படகுகளை ஆய்வு செய்த நிலையில் கடல் வளத்தை கெடுக்கும் அதிக திறன் கொண்ட குதிரை இன்ஜின்களை பயன்படுத்தினால் விசைப்படகு உரிமம் ரத்து செய்யப்படும் என  மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண