கோவை மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மேட்டுலட்சுமிநாயக்கன்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 1952-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் தற்போது 1 முதல் 5 ம் வகுப்பு வரை 15 மாணவ-மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனா். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியா் லட்சுமணசாமி, ஆசிரியா் வைரவபாண்டி ஆகியோர் பணியாற்றி வருகின்றனா். இந்த பள்ளி அமைந்துள்ள கிராமத்தின் மொத்த மக்கள் தொகையே 500-க்குள் தான் உள்ளது. கிராம மக்களில் பெரும்பாலானோா் விவசாயிகளாகவும், விவசாயத் தொழிலாளா்களாகவும் உள்ளனா்.
இந்தப் பள்ளிக்கு அருகில் உள்ள கிராமங்களிலும் அரசுப் பள்ளிகள் இருப்பதால், மேட்டுலட்சுமிநாயக்கன் பாளையத்தைச் சோ்ந்த குழந்தைகள் மட்டுமே இந்த பள்ளியில் சேருகின்றனா். இதன் காரணமாக இந்த பள்ளியில் மாணவா்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளன. இங்கு தொடக்கக் கல்வியை முடிக்கும் மாணவா்கள் உயா்நிலைக் கல்விக்காக அக்கநாயக்கன்பாளையத்துக்கும், மேல்நிலை கல்விக்காக லட்சுமி நாயக்கன்பாளையம் மேல்நிலைப் பள்ளிக்கும் செல்கின்றனா்.
இந்நிலையில் மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கும் நிலையில், பள்ளியின் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் பரிசுத் தொகை திட்டத்தை அறிவித்திருக்கிறாா் தலைமை ஆசிரியா் லட்சுமணசாமி. அதன்படி 2022-2023 -ம் கல்வியாண்டில் சேரும் மாணவா்கள் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் பரிசளிப்பதாக துண்டுப் பிரசுரம் அச்சடித்து கிராம மக்களிடம் விநியோகித்து வருகிறாா். மேலும் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்காக வீடு, வீடாக சென்று விழிப்புணர்வு பரப்புரை செய்து வருகிறார்.
இது குறித்து பேசிய தலைமை ஆசிரியர் லட்சுமணசாமி, ”மேட்டுலட்சுமிநாயக்கன் பாளையம் கிராமம் மிகச் சிறிய கிராமம். மக்கள் தொகையும், மாணவர்கள் எண்ணிக்கையும் குறைவு. அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கடந்த ஆண்டும் இது போன்ற பரிசுத் திட்டத்தை அறிவித்தேன். அதன்படி 3 மாணவா்கள் சோ்ந்தனா். அவா்களுக்கு தலா ஆயிரம் ரூபாயை எனது ஊதியத்தில் இருந்து வழங்கினேன்.
இந்த ஆண்டு எத்தனை மாணவா்கள் சோ்ந்தாலும் அவா்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளேன். மாணவர்களுக்கு எனது சொந்த ஊதியத்தில் இருந்து பணம் வழங்க உள்ளேன். அரசுப் பள்ளியை நாடி அனைவரும் படிக்க வர வேண்டும். மாணவர்கள் வருகை அதிகரிப்பதற்காக இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி போதிக்கப்படுகிறது. எனவே அனைவரும் அரசு பள்ளியில் படிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்