இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வலியுறுத்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்:
அக்கடிதத்தில், ”தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 மீனவர்கள் 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருவதாகவும், இது தமிழ்நாட்டு மீனவர்களிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மீன்பிடித் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள இந்த மீனவர்ககளின் படகுகள் கடலுக்குள் தெளிவான எல்லை நிர்ணயம் மற்றும் எல்லை தொடர்பான வரையறைகள் ஏதும் இல்லாததால், சில நேரங்களில் தற்செயலாக இலங்கைக் கடற்பரப்பிற்குள் சென்று விடுகிறது. இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மீனவ சமுதாயத்தினரிடையே பதற்றம் அதிகரித்து, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, மீனவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. எனவே, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவித்திட ஏதுவாக, இலங்கை அரசுடன் உடனடியாகத் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்களின் வாழ்வில் அமைதியை ஏற்படுத்திடவும், இப்பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வினைக் காணவும், இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டுமென்ற தனது முந்தைய கோரிக்கையினை மீண்டும் இத்தருணத்தில் வலியுறுத்துவதாகத்” தெரிவித்துள்ளார்.
17 மீனவர்கள் கைது:
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் நடுக்கடலில் நேற்று இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 2 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகள் மற்றும் அதில் இருந்த 13 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி படகுகளுடன் சிறைபிடித்து சென்றனர். மேலும், மீனவர்கள் படகில் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, பேட்டரி செல்போன் மற்றும் 20 லிட்டர் டீசல் உள்ளிட்ட பொருட்களையும் இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளதாக தெரிகிறது.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு படகு மற்றும் 6 மீனவர்களையும் சிறைபிடித்தனர். இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறிய நடவடிக்கைக்கு மீனவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களின் பெயர் மற்றும் கூடுதல் விவரங்கள் இலங்கை கடற்படை விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட 17 தமிழக மீனவர்கள் பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும் படிக்க