கடந்த பத்து மாதங்களாக உதவியக அலுவலர் பணியிடம் காலியாக உள்ள நிலையில் மதுரையில் மாநகராட்சி பகுதியில் மட்டும் அதிகளவிற்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகள் சிறுவர்கள் - கடந்த ஒரு வாரத்தில் குழந்தைகள் உட்பட 30க்கு மேற்பட்ட பேர் பாதிப்பு.
தற்போது டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகிறது. கொசு கடியால் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. மூன்று நாட்களுக்கு மேலாக தீவிரமான காய்ச்சல், தலைவலி, உடலில் அலர்ஜி, மூட்டு மற்றும் தசைகளின் வலி இருப்பது டெங்கு காய்ச்சலில் அறிகுறிகள் என கூறப்படுகிறது. தீவிர பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது அவசியமாகிறது. ஆனால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சில உணவு முறைகள் மூலம் டெங்கு காய்ச்சலை ஆரம்பத்திலேயே தடுக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் குழந்தைகள் உட்பட 30க்கு மேற்பட்ட பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் சில நாட்களாக பெய்த மழையால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றதால் ஏ.டி.எஸ்., கொசுக்கள் உருவாகி அதன்மூலம் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மதுரை மாநகராட்சி பகுதி முழுவதிலும் உள்ள நகர் புற சுகாதார நிலையங்கள், மாநகராட்சி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 30 க்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் 11 குழந்தைகள் அடங்குவர், இதேபோன்று மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மேலும் 20 க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பதினோரு குழந்தைகளில் பெரும்பாலும் 1 முதல் 5 வரையிலான குழந்தைகள் 8 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கும் டெங்கு பாதிப்பு அதிகளவிற்கு ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக உதவி நகர் நல அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது. இது போன்ற பேரிடர் காலங்களில் சுகாதாரத்தை பேணும் வகையில் காலியாக இருக்கக்கூடிய உதவி நகர் நல அலுவலர் பணியிடத்தை உடனடியாக தமிழக அரசு நிரப்ப வேண்டும் என மக்கள் வலியுறுத்துகிறார்கள். மேலும் மாவட்டத்தில் உள்ள தனியார் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் ஆங்காங்கே குவித்துவைக்கப்பட்டுள்ள பழைய டயர்கள் மற்றும் தேவையற்ற பொருட்களில மழை நீர் தேங்கி நிற்கும் அவலம் நீடிக்கிறது. மேலும் அரசு கட்டிடங்கள் மற்றும் அரசு அலுவலக கட்டிடங்களில் மழை நீர் ஆங்காங்கே தேங்கி இருப்பதால் டெங்கு கொசுக்கள் அதிகளவிற்கு உற்பத்தியாகி பொதுமக்கள் டெங்கு காய்ச்சலுக்கு பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுவருகிறது.
மதுரை மாவட்ட முழுவதிலும் டெங்கு பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால் மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் டெங்கு ஏடிஎஸ் கொசு உற்பத்தியை தடுக்க முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரபடுத்த வேண்டும் எனவும், குழந்தைகள், சிறுவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படாத வகையில் பள்ளிகூடங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்தியை தடுப்பது குறித்து நேரில் ஆய்வு செய்யவும், டெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தி உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் பற்றி எரிந்த கார், சரக்கு வாகனம்: முன் பகையால் மதுரையில் அரங்கேறும் அட்டூழியம்!