சுவாமி விவேகானந்தர் மற்றும் லோகமான்ய திலகர் ஆகியோருக்கு உத்வேகம் அளித்த 'சனாதன தர்மத்தை' I.N.D.I.A கூட்டணி அழிக்க நினைக்கிறது என பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.


சனாதனம் என்ற ஒற்றை வார்த்தை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி தெரிவித்த கருத்து, அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.


தேசிய அளவில் பேசுபொருளான சனாதனம்:


சென்னையில் நடைபெற்ற நிகழ்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி, “சனாதனம் சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளது. டெங்கு, மலேரியா, கொரோனாவை போன்று அதை முற்றிலும் ஒழிக்க வேண்டும்” என பேசியிருந்தார். 


ஆனால், உதயநிதியின் இந்த கருத்தை எக்ஸ் வலைதளத்தில் திரித்து பதிவிட்ட பாஜக தேசிய ஐடி பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா, "இனப்படுகொலை செய்ய உதயநிதி அழைப்பு விடுப்பதாக" கூறினார். இதை தொடர்ந்து, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இந்து மக்களுக்கு எதிராக அமைச்சர் உதயநிதி பேசுவதாக கருத்து பரவியது. இதை தொடர்ந்து, பாஜகவை சேர்ந்த பல தலைவர்களும் உதயநிதிக்கு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். 


இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, சனாதன தர்ம விவகாரத்தில் I.N.D.I.A கூட்டணியை விமர்சித்து பேசினார். இந்தாண்டின் இறுதியில் அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 50,700 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.


"ஒன்றுக்கும் உதவாத I.N.D.I.A கூட்டணி"


இதை தொடர்ந்து பேசிய அவர், "சுவாமி விவேகானந்தர் மற்றும் லோகமான்ய திலகர் ஆகியோருக்கு உத்வேகம் அளித்த 'சனாதன தர்மத்தை' I.N.D.I.A கூட்டணி அழிக்க நினைக்கிறது. இன்று வெளிப்படையாகவே சனாதனத்தை குறிவைக்க ஆரம்பித்து விட்டார்கள். நாளை நம் மீதான தாக்குதல்களை அதிகப்படுத்துவார்கள்.


நாடு முழுவதும் உள்ள அனைத்து சனாதனிகளும், நம் நாட்டை நேசிக்கும் மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களை தடுத்து நிறுத்த வேண்டும். சனாதன தர்மத்தை முடிவுக்கு கொண்டு வந்து 1,000 ஆண்டுகள் அடிமைத்தனத்தில் நாட்டை தள்ள I.N.D.I.A. கூட்டணி விரும்புகிறது.


அவர்கள் (I.N.D.I.A. கூட்டணி) சமீபத்தில் மும்பையில் ஒரு கூட்டம் நடத்தினர். ஒன்றுக்கும் உதவாத கூட்டணியை எப்படி நடத்துவது, எப்படிப்பட்ட அரசியலை முன்னெடுக்க வேண்டும், என்ன மாதிரியான வியூகத்தை வகுக்க வேண்டும் என அவர்கள் முடிவு செய்தனர் என்று நினைக்கிறேன். மறைமுக திட்டத்தை முடிவு செய்துள்ளனர்.


இந்தியாவின் கலாச்சாரத்தைத் தாக்குவதே அவர்களின் உத்தி. அவர்கள் இந்தியர்களின் நம்பிக்கையைத் தாக்கி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாட்டை ஒன்றிணைத்த எண்ணங்கள், மதிப்புகள் மற்றும் மரபுகளை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர்" என்றார்.