கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தமிழக மாநில எல்லையான ஜூஜூவாடி யிலிருந்து சில மீட்டர்கள் தூரத்தில் கர்நாடகா மாநிலத்திற்குட்பட்ட அத்திப்பள்ளி, பட்டாசு கடையில் இன்று (அக்டோபர் 7) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.


பட்டாசு கடை:


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியின் டோல்கேட் அருகே தீபாவளிக்காக பட்டாசுகளை விற்பனை செய்ய பட்டாசு கடை அமைக்கப்படிருந்தது. இந்நிலையில், சிவகாசியிலிருந்து பட்டாசுகளை ஏற்றி வந்த வாகனத்தில், பட்டாசு கடையில் பட்டாசுகளை இறக்கி வைக்கும் போது எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிய தொடங்கியது.


நாலாபுறமும் பரவிய தீ:


தீ எரிய தொடங்கியதும் வாகனத்தில் இருந்த நபர்களும் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்த நபர்களும் சிதறி ஓடிய நிலையில் பட்டாசுகளில் பற்றிய தீ நாலாபுறமும் சிதறடித்து நெருப்பு பிழம்புகளாக மாறியது. இதனால் கடையின் அருகே நிற்க வைக்கப்பட்டிருந்த கார், பட்டாசு இறக்கி வைத்துக் கொண்டிருந்த ஒரு கண்டெயினர் லாரி, 2 பிக்கப் வாகனம்  மற்றும் 7 இரு சக்கர வாகனங்களில் பற்றிய தீ மளமளவென எரிந்து தீயில் கருகியது.


பட்டாசுகள் பல அடிதூரம் வெடித்து சிதறி வருவதால் அவசர உதவிக்காக அருகே செல்ல முடியாமல் பொது மக்கள் சிதறி ஓடினர். இந்த விபத்தானது பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் ஏற்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். மேலும் தற்போது  தீயினை அணைக்க  தீயணைப்பு துறை வாகனம் சம்பவயிடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.


மேலும் படிக்க: கரூரில் கடும் வெயிலில் தண்ணீர் இல்லாமல் நின்ற பக்தர்கள் - அறநிலையத்துறை அதிகாரிகள் அலட்சியம்


 


மேலும் படிக்க: Mettur Dam: வறட்சியை சந்தித்த மேட்டூர் அணை: நீர்மட்டம் 32 அடியாக சரிவு..நாளை முதல் நீர் திறப்பு நிறுத்தம்!