பல்லவர் கால சிற்பங்கள்


விழுப்புரத்தில் இருந்து வடமேற்கு திசையில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது வெங்கந்தூர் கிராமமாகும். இக்கிராமத்தில் விழுப்புரத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் வீரராகவன் மற்றும் சரவணக்குமார் ஆகியோர் பல்வேறு இடங்களில் மேற்பரப்பு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள சிவன் கோவில் அருகே குவிக்கப்பட்டிருந்த கருங்கற்குவியலில் கி.பி. 9-ம் நூற்றாண்டு பல்லவர் காலத்தை சேர்ந்த மும்மூர்த்தி, முருகன், மூத்ததேவி, நந்தி, லிங்கத்தடி, சூலத்தடி ஆகிய உருவச்சிற்பங்கள் ஒருசேர இருந்தது கண்டறியப்பட்டன.


தொல்லியல் ஆய்வாளர் வீரராகவன் கூறியதாவது:-


புடைப்பு சிற்பங்கள்


மும்மூர்த்தி சிற்பம் நான்முகன் (பிரம்மா) லிங்கவடிவில் ருத்திரன் (சிவன்), நரசிங்கவடிவில் (விஷ்ணு) செதுக்கப்பட்டுள்ளன. இதன் கீழ் 3 கூடுகளில் மனித உருவங்கள் கலை அழகுடன் காட்டப்பட்டுள்ளன. வைதீக மதங்கன சைவம், வைணவம் அக்காலமக்கள் ஒருங்கிணைந்து வழிபட்டு வந்ததை இதன் மூலம் அறியலாம். இதற்கு சான்றாக விழுப்புரம் அருகே கண்டம்பாக்கம், நன்னாடு, திருவாமாத்தூர், கொண்டங்கி, வெங்கந்தூர் ஆகிய ஊர்களில் இம்மும்மூர்த்திகளின் புடைப்பு சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. முருகன் சிற்பம், பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் இருகரங்களுடன் காட்சியளிக்கிறார். மார்பினை ருத்ராட்ச புரிநூலும் வயிற்றினை வயிற்றுக்கட்டும், புஜங்களில் கடகமும், வலக்கரத்தில் சக்தி படையையும் ஏந்தியுள்ளார். இதுபோன்று பத்மத்தின் மீது அமர்ந்த நிலையில் புடைப்புச்சிற்பம் வேறு எந்த மாவட்டத்திலும் இதுவரையிலும் கண்றியப்படவில்லை. இம்மாவட்டத்தில் மட்டுமே தோகைப்பாடி, வெண்மணியாத்தூர், சித்தேரிக்கரை, வழுதரெட்டி, திருவாமாத்தூர், கீழ்பெரும்பாக்கம், தற்போது வெங்கந்தூர் ஆகிய ஊர்களில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன.


மூத்ததேவி


அதேபோல் மூத்ததேவி சிற்பமானது, கற்குவியலின் இடையிலும், குளத்தின் தென்கரையிலும், 2 பல்லவர்கால மூத்ததேவி புடைப்புச்சிற்பங்கள் உள்ளன. இவற்றின் உருவ அமைப்பு ஒன்றுடன்ஒன்று ஒத்துள்ளன. மூத்ததேவி கால்களை அகற்றி, பெறுவயிற்றுடன், மகன் அக்கினி, நந்தி முகத்துடனும், மகள் மாந்தியுடனும் காணப்படுகிறாள். இவளது ஆயுதமாக விலக்குமாறும், காக்கை கொடியும் காட்டப்பட்டுள்ளன. இவ்விரண்டு மூத்ததேவிகளின் கைகளின்கீழ் பணிப்பெண்கள் செல்வக்குடங்களை தலையில் ஏந்தியுள்ளனர். அந்த குடங்களின் மீது மூத்ததேவியின் கைகள் தாங்கியுள்ளன. லிங்கத்தடியும், சூலத்தடியும், கற்குவியலுக்கிடையே சுமார் 6 அடி நீளம் கொண்ட லிங்கத்தடி ஆகமவிதிப்படி பிரம்மா, விஷ்ணு, ருத்திரர், பாகங்களுடன் காணப்படுகிறார்.


மேலும் இவ்வூரின் காளித்தெரு மற்றும் ஏரிப்பகுதியில் மேற்பரப்பு ஆய்வு மேற்கொண்டபோது இரண்டு கொற்றவை சிற்பங்கள் கண்டறியப்பட்டன. காளித்தெரு கொற்றவை சிற்பம் மண்மூடியும், ஏரியில் உள்ள கொற்றவை சிற்பம் நீர்சூழ்ந்துள்ளன. கொற்றவை எண்கரங்களுடனும், முதுகில் அம்புராதூளியுடன் மகிஷன் மீது நேராக நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார். தலையை கரண்டமகுடம், காதுகளில் பத்திர அணிகலனும், கழுத்தை சவடியையும், மார்பை கற்சையும், மணிக்கட்டில் வளையல்களும், இடையில் அரையாடையும், கணுக்கால்களில் கொலுசும், அழகுசெய்கின்றன.


எண் கரங்கள் கொண்ட கொற்றவையின் வலக்கரங்களில் சக்கரம், நீண்ட வாள், அம்பு, சாட்டை, இடக்கரங்களில் சங்கு, வில், கேடயம் மற்றும் முன்இடக்கரம் தொடையிலும் தாங்கியுள்ளன. மண்மூடியுள்ள காளித்தெரு கொற்றவை சிற்பம் சற்றே வெளியில் காணப்படுகிறது. இவற்றின் காலம் கி.பி. 9-ம் நூற்றாண்டாக இருக்கலாம். வெங்கந்தூர், பல்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு சிற்பங்களை கொண்டுள்ளதால் வரலாற்று தடயங்கள் கொண்டது என அவர் கூறினார்.


விக்கிரவாண்டியில் பரபரப்பு: திமுக எம்எல்ஏவை ரவுண்டு கட்டிய பொதுமக்கள்- என்ன காரணம்?