Hosur Fire Accident: ஓசூரில் டாடா நிறுவனத்தின் செல்போன் உற்பத்தி ஆலையில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 


செல்போன் உற்பத்தி ஆலையில் தீ விபத்து


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த நாகமங்கலம் பகுதியில் டாடா நிறுவனத்திற்கு சொந்தமான தனியார் செல்போன் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த் ஆலையில், ஐபோன்களுக்கான உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த 2021ம் ஆண்டில் இருந்து இயங்கி வரும் இந்த ஆலையில்,  24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.


இந்நிலையில், இன்று காலையில் எதிர்ப்பாராத விதமாக ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திறந்த வெளி என்பதால் காற்று பலமாக வீசியதன் விளைவாக,  ஆலை முழுவதும் மளமளவென வேகமாக தீ பரவியது. இதனை கண்டதும் ஆலையில் இருந்த ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினர்.






ஆலையை சூழ்ந்த கரும்புகை:


கொழுந்து விட்டு எர்ந்த தீயால் பல அடி உயரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது. இதனிடயே,  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. தற்போது வரை ஆலையில் இருந்த ஊழியர்கள் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது.


ஓசூரில் தொற்றிக்கொண்ட பரபரப்பு:


கிட்டதட்ட மூன்று ஷிப்பிடுகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் இவ்விடத்தில் இருக்கும் பட்சத்தில், தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் முதல் ஷிப்டில் 1500 பணியாளர்கள் பணியாற்றி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் ஏற்பட்டுள்ள, பெரும் தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


டாடா நிறுவனம் விளக்கம்:


தீ விபத்து தொடர்பாக டாடா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள எங்கள் ஆலையில் துரதிருஷ்டவசமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையில் உள்ள எங்கள் அவசரகால நெறிமுறைகள் எங்கள் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தன. தீ விபத்துக்கான காரணம் தொடர்பான விசாரணை உள்ளது, எங்கள் ஊழியர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் நலன்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்” என தெரிவித்துள்ளது.