தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்திக்க உள்ளார்.


தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்தவுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் ஊழல் விபரங்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரங்களின்போது உறுதியளித்தார். இதனை தொடர்ந்து கடந்த மே மாதம் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின். அதன் பின்னர் தேர்தலில் அளித்த வாக்குறுதிபோல் அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் உள்ளாட்சித் துறை  அமைச்சர்எஸ்.பி.வேலுமணி, முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, முன்னாள் சுகாதாரத்துறை  அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இதுவரை சோதனை நடத்தப்பட்டுள்ளது.


ஜூலை மாதம் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆகஸ்டு மாதம் எஸ்.பி.வேலுமணி, செப்டம்பர் மாதம் கே.சி.வீரமணி என மாதம் ஒரு முன்னாள் அமைச்சரை குறிவைக்கும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இந்த அக்டோபர் மாதத்தில் சி.விஜயபாஸ்கரை குறி வைத்தனர். அடுத்தடுத்த மாதங்கள் எந்தெந்த முன்னாள் அமைச்சர்கள் சோதனைக்கு உள்ளாகப் போகிறார்கள் என்று மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.




தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்று காலை 11 மணிக்கு ஆளுநர் என்.ரவியை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்கிறார். தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பழனிசாமி சந்தித்து பேசுகிறார். ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள இந்த சந்திப்பின்போது, அரசியல் சார்ந்த முக்கியமான விவகாரங்கள் குறித்தும் ஆளுநரிடம் பேச வாய்ப்புள்ளது. 


முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சில தினங்களுக்கு முன்பு ஆளுநரை தனித்தனியாக சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண