முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமானவர் ஆ.ராசா. தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழும் இவரது 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 






அசையா சொத்துக்கள் முடக்கம்:


இதுதொடர்பாக, அமலாக்கத்துறை பதிவிட்டுள்ளதாவது” பி.எம்.எல்.ஏ. 2002ன் விதிகளின் கீழ் முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு சொந்தமான அவரது பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் இருந்த 15 அசையா சொத்துக்களை கைப்பற்றியுள்ளது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டள்ளது. ஆ.ராசா மீதான இந்த நடவடிக்கை சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையின் கீழ் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.


தி.மு.க.வின் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக உள்ள ஆ.ராசா காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணியிலான மத்திய அரசில் சுற்றுச்சூழல் அமைச்சராகவும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இவர் மீது கடந்த 1999ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்தது.


தொடரும் அமலாக்கத்துறை அதிரடி:


ஆ.ராசா தன்னுடைய வருமானத்திற்கு அதிகமாக 575 சதவீதம் அதாவது 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவு சொத்து சேர்த்ததாக புகார் முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் ராசா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 16 பேருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை தொடர்பாக ஏற்கனவே சென்னை, பெரம்பலூர், திருச்சி ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணை தொடர்பாக கடந்தாண்டு அமலாக்கத்துறை சொந்தமான 45 ஏக்கரை முடக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறை ஆ.ராசா மீது அடுத்தடுத்து நடவடிக்கைகளை எடுத்து வருவது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆ.ராசா மீதான அமலாக்கத்துறையின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் தி.மு.க.விற்கும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க: Rajasthan election 2023: ராஜஸ்தானில் ஆட்சியை இழக்கிறதா காங்கிரஸ்? தேர்தல் முடிவுகளை மாற்றும் முக்கிய பிரச்சினைகள் - பாஜகவிற்கு சாதகமா?


மேலும் படிக்க: Nasser Father Death: தமிழ் திரையுலகில் சோகம்.. பிரபல நடிகர் நாசரின் தந்தை உயிரிழப்பு!