விஜய் மக்கள் இயக்கம்
நடிகர் விஜய் தலைமையில் விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இது விரைவில் அரசியல் கட்சியாக மாறலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் 100-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று இருக்கின்றனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு அணிகளும் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு பரிசு
முன்னதாக நடிகர் விஜய் 234 தொகுதிகளிலும் 10 ஆவது மற்றும் 12ஆவது பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த தமிழ்நாடு மாணவ, மாணவியர்களுக்கு உதவித் தொகை வழங்கினார். இந்த நிகழ்வில் காமராசர், அம்பேத்கர், பெரியார் ஆகியோரைப் படிக்க வேண்டும் எனக் கூறிய நிலையில், விஜய்யின் இந்தப் பேச்சு அவரது அரசியல் பயணத்திற்கான வேலைகளை விஜய் செய்து வருகிறார் என்று பேசப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி பயிலகங்கள் தொடங்கப்பட்டன. தற்போது வரை தமிழ்நாட்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 124 பயிலகங்கள் வரை திறக்கப்பட்டுள்ளது.
மக்களிடம் நேரடியாக செல்லும் விஜய் மக்கள் இயக்கம்
கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் மக்களிடம் நேரடியாக பயனுள்ள, முக்கிய விஷயங்களை செய்ய விஜய் மக்கள் இயக்கம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் விலையில்லா விருந்தகம் திட்டம் மூலம் உணவு அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில் வார இறுதி நாட்களில் பால் முட்டை ரொட்டி வழங்குதல், ஏழை குழந்தைகளுக்கு இரவு நேர பயிலகம், விழியகம், குருதியகம், உள்ளிட்ட முன்னெடுப்புகளை செய்து வருகிறது.
இலவச சட்ட ஆலோசனை மையம்
அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில், இலவச சட்ட ஆலோசனை மையம் அமைப்பதற்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாட்டிலே முதல் முறையாக நடிகர் விஜய்யின் உத்தரவின்படி, சென்னை கொடுங்கையூர் கேகே நகர் ஆறாவது தெருவில் இலவச சட்ட ஆலோசனை மையம் நேற்று திறக்கப்பட்டது. விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு இலவச சட்ட ஆலோசனை மையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது: முதன்மையாக குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கி அவர்கள் வாழ்வாதாரத்தை மீட்டுக் கொடுப்பது. வங்கிக் கடன், வீட்டுக் கடன், தனியார் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்பீடு பெற்று தருதல், சட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல், நுகர்வோர் நிறுவனங்களிலிருந்து எழுப்பி விடு பெற்று தருதல் உள்ளிட்ட பணிகள் இந்த இலவச சட்ட ஆலோசனை மூலம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
அடுத்த இலக்கு இதுதான்
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையம் திறக்கப்பட்டுள்ளது. இவை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று விரைவில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம் தொடங்க திட்டம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் விஜய் மக்கள் இயக்கம் கட்டமைப்பு இன்னும் வலுப்பெறும் என விஜய் நம்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன