பிரபல நடிகரும் நடிகர் சங்கத் தலைவருமான நாசரின் தந்தை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.


கோலிவுட்டின் பிரபல நடிகர்களுள் ஒருவரான நாசர், தமிழ் சினிமாவில் 80களில் தொடங்கி பிரபல நடிகர்களுள் ஒருவராக விளங்கி வருகிறார். 1985ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின்  இயக்குநர் இமயமாகக் கொண்டாடப்படும் கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் கல்யாண அகதிகள் படத்தில் அறிமுகமானார் நாசர்.


நடிகராக மட்டுமில்லாமல் டப்பிங் ஆர்டிஸ்ட், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்ட ஒரு கலைஞராக நாசர் வலம் வருகிறார். ஒரு சில படங்களில் கதாநாயகனாக  நடித்த நாசர், பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்கள் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில்  நடித்து மக்கள் மனதில் நிலையான இடத்தைப் பிடித்துள்ளார். தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் , பெங்காலி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்துள்ளார். 


 நாசரின் தந்தை


சிறுவயது முதலே நாசர் நடிகராக வேண்டும் என்பது அவரது தந்தை மெஹபூப் பாஷாவின் விருப்பமாக இருந்து வந்துள்ளது. செங்கல்பட்டில் நகைகளுக்கு பாலிஷ் போடும் பணி செய்து தனது குடும்பத்தை நடத்தி வந்தார் நாசரின் தந்தை மெஹபூப். இந்நிலையில், தனது தந்தையில் ஆசை நிறைவேற்ற சென்னையில் கூத்துப் பட்டறையில் சேர்ந்தார் நடிகர் நாசர். அவரது விருப்பப்படியே தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவராக நாசர் உருவெடுத்து கோலிவுட் ரசிகர்களின் இதயங்களில் இத்தனை ஆண்டுகளாக இடம்பிடித்துள்ளார்.


இதனிடையே நாசரின் தந்தை, உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளாக நாசரின் சகோதரர் ஜவஹர் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், தனது 95 ஆவது வயதில் இன்று உயிரிழந்துள்ளார் மெஹபூப். அவரது இறப்புச் செய்தியைக் கேட்டு பிரபலங்கள் தங்களது இரங்கலை நேரிலும் சமூக வலைதளங்களிலும் தெரிவித்து வருகிறார்கள்.


அவரது இறுதிச் சடங்கு குறித்த தகவல் விரைவில் வெளியாகும். மேலும் திரைப்பிரபலங்களின் தனிப்பட்ட உறவினர்களின் இறப்பில் பத்திரிகையாளர்கள் புகைப்படங்கள் எடுக்கக் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


 


 






நாசரின் தந்தை உயிரிழந்தது தமிழ் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.