Rajasthan Assembly Election 2023: ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பில், ஆளும் காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் ஆட்சியை இழக்கும் என முடிவுகள் வெளியாகியுள்ளன.


ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தல்:


5 மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. அந்த 5 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மற்றும் சத்திஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களும் அடங்கும்.  தற்போது அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அங்கு நடைபெற்று வரும்,  200 தொகுதிகளை கொண்டுள்ள ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்திற்கு, நவம்பர் 3ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏபிபி சி வோட்டர் நடத்திய கருத்துகணிப்பில் ராஜஸ்தானில் காங்கிரசை வீழ்த்தி பாஜக ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தானில் தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும், பிரச்னைகள் என்ன என்பதை இங்கு அறியலாம். 


01. அரசின் மீதான அதிருப்தி:


அரசின் மீதான அதிருப்தி காரணமாக ஆட்சி மாறுவது என்பது ராஜஸ்தான் வரலாற்றில் தொடர்கதையாக உள்ளது. கடந்த 1993ம் ஆண்டு முதல் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள், ஒவ்வொரு தேர்தலிலும் மாறி மாறி வென்று ஆட்சி அமைத்து வருகின்றன. எந்த கட்சியும் தொடர்ந்து ஆட்சியை பிடித்ததில்லை.  அந்த வரலாறு நடப்பாண்டும் தொடர்ந்தால், காங்கிரஸ் தோல்வியை தழுவி பாஜக ராஜஸ்தானில் ஆட்சி அமைக்க கூடுதல் வாய்ப்பு உள்ளது.


02. உட்கட்சி மோதல்:


பிரதான கட்சிகளான காங்கிரசும்,  பிஜேபியும் உள்கட்சி சவால்களை எதிர்கொள்கின்றன. ஆளுங்கட்சியான காங்கிரசில் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே அதிகாரப் போட்டி நிலவுகிறது.  இது கட்சியின் ஒற்றுமையை பலவீனப்படுத்தியுள்ளது, மறுமுனையில் பிஜேபி தரப்பில், முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே மற்றும் அவரது அதரவாளர்கள் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற்றுள்ளனர். அதேநேரம், பாஜக தலைமை வசுந்தரா ராஜேவை மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இது இரு கட்சிகளில் நிலவும் முக்கிய பிரச்சினையாக உள்ளது.


03. சட்ட-ஒழுங்கு பிரச்னை:


எந்தவொரு மாநில தேர்தலின் போது சட்ட-ஒழுங்கு விவகாரம் என்பது முக்கிய பேசுபொருளாக மாறும். ராஜஸ்தானிலும் அதே நிலை தான் நிடிக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மாநில அரசு விரைந்து செயல்படவில்லை எனவும், சட்டம் மற்றும் ஒழுங்கில் "மோசமடைந்து" இருப்பதாகவும் பாஜக விமர்சித்து வருகிறது. அண்மையில் பிரதமர் மோடி கூட, இந்த குற்றச்சாட்டை முன்வைத்து காங்கிரஸ் அரசை முன்வைத்து குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.


04. வகுப்புவாத பிரச்னைகள்:


பாஜக இந்துத்துவா விவகாரத்தை கையிலெடுத்துள்ள நிலையில், ராஜஸ்தானில் வகுப்புவாத பிரச்சினைகள் என்பது தொடர்கதையாக உள்ளது. கரௌலி, ஜோத்பூர் மற்றும் பில்வாராவில் உள்ள வகுப்புவாத சம்பவங்கள், அல்வாரில் கோயில் இடிப்பு மற்றும் இஸ்லாத்தை அவமதித்ததாக உதய்பூர் தையல்காரர் கன்ஹையா லாலின் சர்ச்சைக்குரிய கொலை போன்ற நிகழ்வுகள் பொதுமக்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


நலத்திட்ட அறிவிப்புகள்:


உட்கட்சி மோதல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றால் காங்கிரஸ் ஆட்சியின் மீது பொதுமக்களிடையே அதிருப்தி நிலவுகிறது. அதனை போக்கும் நோக்கில் காங்கிரஸ் அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சுமார் 7 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பயன்பெறும் வகையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியிருப்பது அதில் குறிப்பிடத்தக்கது. சிரஞ்சீவி உடல்நலக் காப்பீட்டுத் திட்டம், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு மானியத்துடன் கூடிய எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு உதவித்தொகை ஆகியவையும் கவனம் பெற்றுள்ளன.


கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டம்:



கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டத்திற்கு தேசிய திட்டத்திற்கான அந்தஸ்து வழங்க,  காங்கிரஸ் அழுத்தம் கொடுத்துள்ளது. இந்த திட்டம் அந்த பிராந்தியத்தின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டம் தொடர்பாக முன்பு வழங்கிய வாக்குறுதிகளை பாஜக பின்வாங்கி விட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது.


விவசாய கடன் தள்ளுபடி:



விவசாயக் கடன் தள்ளுபடி என்ற தேர்தல் வாக்குறுதியை காங்கிரஸ் நிறைவேற்றவில்லை என்று பாஜக குற்றம்சாட்டுகிறது. கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களை ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ளதாகவும், வணிக வங்கி கடன்களுக்கான பொறுப்பை மத்திய அரசிடம் மாற்றிவிட்டதாகவும் காங்கிரஸ் அரசு விளக்கமளித்துள்ளது.


ஆசிரியர் இடமாற்றம்:


அரசுப்பள்ளியில் பணியாற்றும் சுமார் ஒரு லட்சம் மூன்றாம் நிலை ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து இருப்பது மாநிலத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றால் இந்தக் பிரச்னையை தீர்ப்பதற்கான வழிவகை செய்யப்படும் என காங்கிரஸ் அரசு உறுதியளித்துள்ளது.


தேர்வுத் தாள் கசிவு


ஆசிரியர்களுக்கான ராஜஸ்தான் தகுதித் தேர்வு போன்ற அரசு பணிக்கான தேர்வுத் தாள்கள்,  கசிந்ததால்  வேலையில்லாத இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்த வைத்து பாஜக தீவிரமாக களமாடி வருகிறது. அதேநேரம், சச்சின் பைலட் தரப்பும் இந்த விவகாரத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பது, காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.


மேற்குறிப்பிடப்பட்ட விவகாரங்கள் தற்போதைய சூழலில் ராஜஸ்தானில் நிலவும் முக்கிய பிரச்னைகளாகவும், தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் விவகாரங்களாகவும் கருதப்படுகின்றன. பரப்புரையின் போது இந்த விவகாரங்கள் எப்படி கையாளப்படுகின்றன என்பதை சார்ந்தே அவை தாக்கத்தை ஏற்படுத்துமா? இல்லையா என்பது உறுதி செய்யப்படும்.