தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்றாக அ.தி.மு.க. உள்ளது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மோதல்கள் நாம் அனைவரும் அறிந்ததே. தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியை கைப்பற்றிய பிறகு எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் இடையே நடைபெற்று வந்த மோதல் போக்கில், நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்தது. இதையடுத்து, அவர் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவர் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை இன்னும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை.


பொதுச்செயலாளர் பதவி:


கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் எப்போதும் அ.தி.மு.க. போட்டியிடுவது வழக்கம். இந்த நிலையில், வரும் மே மாதம் 10-ந் தேதி கர்நாடக மாநிலத்தில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. ஆனால், தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை இன்னும் அங்கீகரிக்காததால் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில், இதை மேற்கோள் காட்டி எடப்பாடி பழனிசாமி தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கர்நாடக தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட ஏதுவாக தன்னை அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக தக்க முடிவை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு 10 நாட்கள் கால அவகாசம் வழங்கியது.


தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை:


இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை மறுநாளுடன் நிறைவடைய உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. பொதுச்செயாலளராக அங்கீகரிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது. இந்த ஆலோசனையில் அவரை பொதுச்செயலாளராக அங்கீகரிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்யப்படும்.


அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துவிட்டால், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பெரும் பின்னடைவு ஆகும். இதனால், இந்திய தேர்தல் ஆணையம் இன்று நடத்தும் ஆலோசனை கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


பரபரப்பு:


அதேசமயம், டெல்லி நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி இந்திய தேர்தல் ஆணையத்ததில் மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அ.தி.மு.க. தற்போது ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில்தான் செயல்பட்டு வருகிறது என்றும், அவர்தான் உண்மையான அ.தி.மு.க. என்றும், அவர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளிக்கும் நபரே அ.தி.மு.க. சார்பில் கர்நாடக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பரபரபப்பான சூழலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பற்றி இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க: Amarnath Yatra 2023 Registration: அமர்நாத் யாத்திரை போக ஆசையா.. எங்கே, எப்படி பதிவு செய்ய வேண்டும்.. முழு விவரம் தருகிறது ஏபிபி நாடு


மேலும் படிக்க: ADMK Meeting: வரும் 20ம் தேதி கூடுகிறது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. ஈபிஎஸ் அவசர அழைப்பிற்கு காரணம் என்ன?