அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்  ஏப்ரல் 20ம் தேதி சென்னையில் நடைபெறும் என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அன்றைய தினம் மாலை 5 மணியளவில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. அதில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்கப்படுகிறது.


அவசர கதியில் நடந்த செயற்குழு  கூட்டம்:


நாடாளுமன்ற பொதுதேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால், அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக போட்டியின்றி எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, முதன் முறையாக அவசர செயற்குழு கூட்டம் கூடியது. கடந்த 16ம் தேதி அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்கு அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்கினார். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன் முடிவில், 


15 தீர்மானங்கள் நிறைவேற்றம்:


அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவிப்பது. 2 கோடி புதிய உறுப்பினர்களை அதிமுகவில் இணைக்க இலக்கு வைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உழைக்க வேண்டும்.  பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற உழைக்க வேண்டும்.  வரும் ஆகஸ்ட் 20-ந்தேதி மதுரையில் அதிமுக மாநில மாநாடு நடைபெறும்.  திமுகவுடன் ரகசிய உறவு வைத்து அதிமுகவிற்கு துரோகம் இழைத்தவர்களுக்கு பாடம் புகட்டிட வேண்டும்.  விலைவாசி, சொத்துவரி, குடிநீர் வரி மற்றும் மின் கட்டண உயர்வுக்கு எதிராகவும், திமுக அரசிற்கு கண்டனம் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதைதொடர்ந்து தற்போது, வரும் 20ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.


கூட்டம் எதற்கு?


இந்த கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை விரைவுபடுத்துவது, 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை நியமிப்பது, பூத் கமிட்டிகளை அமைப்பது என, அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி, மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுரை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


முந்தி ஓடும் திமுக:


ஆளும் கட்சியான திமுக ஏற்கனவே அதிமுகவை மிஞ்சும் விதமாக தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஏற்கனவே 234 தொகுதிகளுக்குமான பார்வையாளர்களை நியமித்துள்ளது. புதியதாக ஒரு கோடி தொண்டர்களை கட்சியில் இணைப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. அண்மையில் சட்டமன்ற தொகுதிகளுக்கான திமுக பார்வையாளர்கள் உடனும் முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். திமுக மற்றும் அதிமுக கட்சிகள் துரித கதியில் தேர்தல் பணிகளை முடுக்கி விடுவதால், நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வருமோ எனவும் கருத தோன்றுகிறது.