பிரபல டாக்டரின் அனுபவம் இது...


அலட்சியம் செய்யாதீர்கள் ... கொரோனாவை விட அலட்சியம் தான் அதிகம் உயிரை எடுக்கிறது . உதாரணம் 
எனது கிளினிக்கில்  நான் கண்ட இரண்டு நபர்கள், முதல் நபர் வயது 45. கடந்த ஐந்து நாட்களாக காய்ச்சல் 
மூன்று நாட்களாக இருமலுடன் வந்தார். 


"காய்ச்சல் அடிச்சுச்சு சார். மெடிக்கல் ஷாப்ல மாத்திரை வாங்கி போட்டேன். இப்போ பரவாயில்லை. ஆனா விட்டு விட்டு லேசா அடிக்குது. ஒரு ஊசி போட்டுட்டு போலாம்னு வந்தேன்"


"சகோ. உங்களுக்கு இருமல் இருக்கா?"


"ஆமா சார். மூனு நாளா இருக்கு."


இப்போது ஆக்சிமீட்டரில் Spo2 சோதனை செய்யப்படுகிறது. 


ஆக்சிஜன் அளவு 90க்கும் 92க்கும் இடையே போட்டி போட்டு கடைசியில் 90% என்று காட்டுகிறது.


ஆக்சிஜன் அளவு சோதிக்கும் போது அவரது மூச்சுவிடும் அளவை சோதித்தேன் 


ஒரு நிமிடத்திற்கு 28 முறை சுவாசித்தார் 


"சகோ. உங்களுக்கு மூச்சுத்திணறல் இருக்கிறதா?" 


"இல்லை சார். ஒரு ஊசி போட்டு விடுங்க. குளத்துல குளிச்சேன் அதனால இப்டி இருக்கு சார். நீங்க வேற மாதிரி நினைச்சு பயப்டாதீங்க "


"நான் வேற மாதிரி நினைச்சு பயப்டறேன்னு எனக்கு ஆறுதல் சொல்றீங்க. 
உங்களுக்கு ஆக்சிஜன் அளவு 90% தாங்க இருக்கு. நீங்க உடனே அட்மிசன் ஆகணுங்க" 


"என்ன சார் சொல்றீங்க? எதுக்கு அட்மிசன்?" 


"ஏன் சார். நாட்டுல கொரோனானு ஒரு தொற்று நோய் பரவிட்ருக்குனு உங்களுக்கு தெரியாத மாதிரியே இருக்கீங்களே. உங்களுக்கு கொரோனா வந்திருக்கு சார். அதுலயும் தீவிர நிலைக்கு மாறப்போகுது. உடனே நீங்க அட்மிட் ஆகணும்" 


அவர் பெரிய ஆர்வம் காட்டவில்லை. அவரது சகோதரரிடம் ஆபத்து குறித்து விவரித்து உடனே இவரை அட்மிட் செய்யுமாறு கூறி அனுப்பினேன். 


அடுத்து வந்த நபர் 
வயது - 60 


"சார் ஒரு வாரமா நல்ல உடம்பு வலி. மெடிக்கல்ல மாத்திரை வாங்கி போட்டேன். சரியாக மாட்டேங்குது. அடிச்சு போட்ட மாதிரி இருக்கு சார்"


"காய்ச்சல் அடிச்சுதா ஐயா?"


"ஆமாங்க சார். மூனு நாளா விட்டு விட்டு காய்ச்சல் அடிச்சுது. ஆனா சரியாகிடுச்சு. "


"இருமல் இருக்கா?" 


"ஆமா லேசா புகைச்சல் இருமல் இருக்கு" 


ஆக்சிஜன் அளவுகள் சோதிக்கப்படுகின்றன. ஆக்சிஜன் 88 க்கும் 92க்கும் ஏறி இறங்கி இறுதியில் 92%க்கு வந்து நின்றது. 


இதற்கிடையில் அவர் மூச்சு விடும் வேகத்தை அளவிடும் போது ஒரு நிமிடத்திற்கு 28 முறை மூச்சு விடுகிறார். 


"ஐயா.. உங்களுக்கு கொரோனா வந்திருக்குற மாதிரி இருக்குங்க.  உடனே அட்மிட் ஆகணும். உங்க கூட யாரு வந்திருக்கா?" 


"என் மகன் வந்துருக்கான்." 


"அவர வர சொல்லிட்டு நீங்க வெளியே வெய்ட் பண்ணுங்க ஐயா" 


அவர் மகனிடம்
"தம்பி.. உங்கப்பாவ உடனே அட்மிசன் போடு. அவருக்கு கொரோனா வந்த மாதிரி இருக்குப்பா " 


சரி என்று கிளம்பினார் அவரது மகன். 


இங்கே 
நான் கண்ட இருவருக்கும் 


காய்ச்சல் எனும் அறிகுறி தென்பட்டுள்ளது 
ஆனால் பரிசோதனை செய்யவில்லை. 


இருவருமே மருந்தகங்களில் மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளனர் 


இருவருமே இன்று வரை அலட்சியத்துடனே இருக்கிறார்கள் 


இத்தகைய நிலையில் இன்று இரவோ நாளையோ  மூச்சுத்திணறல் நிலைக்கு செல்லும் வாய்ப்பு அதிகம் 


எவ்வளவுக்கு எவ்வளவு சிகிச்சை விரைவாக ஆரம்பிக்கப்படுகிறதோ 
அவ்வளவுக்கு அவ்வளவு எளிதாக நோயில் இருந்து மீளலாம் 


இருவருமே தடுப்பூசி போட்டிருக்கவில்லை 


இங்கு


பரிசோதனை இலவசம் 
மருத்துவமனை சிகிச்சை இலவசம் 
ஆக்சிஜன் இலவசம் 
தடுப்பூசியும் இலவசம்


ஆனால் அலட்சியம் விலை மிக்கது 


அலட்சியத்துக்கு விலை 
மரணம் மட்டுமே 


மக்களே விழித்துக்கொள்ளுங்கள் 
பிழைத்துக்கொள்ளுங்கள் 


பொது நலன் கருதி 
வெளியிடுவது 


டாக்டர்.ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 
சிவகங்கை


'லாக்டவுன்ல உங்க ஆரோக்கியம் ரொம்ப முக்கியம்' - மறக்கக் கூடாத 5 விஷயங்கள்!