விளாத்திகுளம் : மிளகாய் வத்தலுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை
விளாத்திகுளத்தில் மிளகாய் அறுவடைப் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். சந்தைகளில் மிளகாய் வத்தலுக்கு உரிய விலை இல்லாததால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்
Continues below advertisement

மிளகாய் விவசாயம்
விளாத்திகுளத்தில் மிளகாய் அறுவடைப் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். சந்தைகளில் மிளகாய் வத்தலுக்கு உரிய விலை இல்லாததால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் நாகலாபுரம் புதூர் சூரங்குடி சிவஞானபுரம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் மானாவாரி சாகுபடி பயிர்களான மிளகாய், வெங்காயம் மல்லி, பருத்தி உள்ளிட்டவைகள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
இந்த ஆண்டு விவசாயிகள் ஜனவரி மாதத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிளகாய் செடிகளை சாகுபடி செய்திருந்தனர். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பெய்த தொடர் கனமழை காரணமாக விளைநிலங்களில் நீர் சூழ்ந்ததால் பயிர்கள் முற்றிலும் நாசமானது இதனை தொடர்ந்து இரண்டு முறை பயிர்களை அழித்துவிட்டு மீண்டும் மறு சாகுபடி செய்திருந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக மழை இல்லாத நிலையில் மிளகாய் விவசாயம் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து மிளகாய் செடிகளில் இருந்து மிளகாய் பழங்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில் ஒரு ஏக்கருக்கு 6 குவிண்டால் வரை மிளகாய் வத்தல் மகசூல் கிடைத்து வந்த நிலையில் இந்த வருடம் நிலங்களில் தேங்கிய மழைநீர், மிளகாய் செடிகளில் போதிய வளர்ச்சி இல்லாதது மற்றும் அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக ஒரு ஏக்கருக்கு ஒரு குவின்டால் மிளகாய் மட்டுமே கிடைப்பதாகவும் கூறும் விவசாயிகள், இதில் விவசாய தொழிலாளர்களுக்கு 250 ரூபாய் சம்பளம் கொடுத்து மிளகாய் செடிகளில் இருந்து மிளகாய் பழங்களை பறித்து அவைகளை வெயிலில் வத்தலாக உலர்த்தி விற்பனைக்கு கொண்டு செல்கையில் மார்க்கெட்டில் உரிய விலை இல்லை எனவும், போன வருடம் 30 ஆயிரம் வரை விற்பனையான ஒரு குவின்டால் ( 100 கிலோ) வத்தல் தற்போது 16 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே விற்பனை ஆவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில் ஒரு ஏக்கரில் கிடைக்கும் ஒரு குவிண்டால் வத்தல் 16 ஆயிரம் ரூபாய்க்கு விலை போவது விவசாயிகளை வேதனை அடையச் செய்துள்ளதாக கூறும் விவசாயிகள் பதப்படுத்தப்பட்ட மிளகாய் வத்தலை சேமிக்கும் வகையில் விளாத்திகுளத்தில் போதுமான குளிர்பதன கிட்டங்கியும் இல்லை, இதனால் தூத்துக்குடியில் உள்ள தனியார் சேமிப்பு குளிர்பதன கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்ல வேண்டியது உள்ளதாக கூறும் இவர்கள் போக்குவரத்து செலவு, சேமிப்பு கிடங்கு கட்டணம் என தங்களை வாட்டுவதாக கூறுகின்றனர் விளாத்திகுளம் விவசாயி பாலகிருஷ்ணன், தற்போதைய நிலையில் சந்தைக்கு அனுப்புவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக கூறும் இவர்கள் அரசு விவசாயிகளின் நிலையினை கருத்தில் கொண்டு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கும் இவர்கள் அரசு மானாவாரி விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் நிவாரணம் வழங்கவும், விளாத்திகுளம் பகுதியில் கூடுதல் குளிர்பதன கிட்டங்கி அமைத்து தரவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.