வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாய் இருங்கள். சமீப மாதங்களாக அதிகம் கேட்கப்படும் வார்த்தைகள் இவை. கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக இருக்கும் நிலையில் பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கு பிறப்பித்துள்ளது. மக்கள் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென அரசு வலியுறுத்துகிறது. ஊழியர்கள் பல்வேறு தரப்பினர் வீட்டில் இருந்தே வேலை பார்த்து வருகின்றனர். காலையில் எழுந்து அலுவலகம் சென்றும், குறிப்பிட்ட இடைவேளையில் சாப்பிட்டு, மாலையில் வாக்கிங், ஜாக்கிங் அல்லது ஜிம் சென்று என செய்துவந்த வழக்கமான வேலைகள் இந்த லாக்டவுன் காலத்தில் தடைபட்டு இருக்கும். இதனால் உடல் ஆரோக்கியத்தில் சில சிக்கல்கள் வரலாம். லாக்டவுன் காலமாக இருந்தாலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்
1.சரியான நேரத்திற்கு உணவு:
நாம் எங்கு இருந்தாலும், என்ன வேலை செய்தாலும் நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒன்று இது. நேரம் என்பது அலாரம் வைத்து உணவு உட்கொள்வது அல்ல. சரியான நேரத்தில் பசி எடுத்து உணவு உட்கொள்வது. காலை முதலே சரியான நேரத்தை கடைபிடித்தால் சரியான பசியை அடுத்தடுத்த வேளைகளில் கண்டிப்பாக உணர முடியும். வேலைப்பளு காரணமாக சாப்பாட்டு நேரத்தை தள்ளிப்போடக்கூடாது. சாப்பாட்டுக்கான நேரத்தை சரியாக ஒதுக்கிக்கொண்டு உட்கொண்டு விட வேண்டும்.
2.சத்தான ஊட்டச்சத்துள்ள உணவு:
நேரத்திற்கு சாப்பிட வேண்டுமென்றதும் வயிறு பசியை போக்க சாப்பிட்டால் போதும் என்பதல்ல. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பது போல சத்தான உணவை உட்கொள்ள வேண்டும். இந்த லாக்டவுன் காலத்தில் ஹோட்டல்களில் கிடைக்கும் துரித உணவுகளுக்கு வாய்ப்பு குறைவு. வீட்டிலேயே நேரத்தை அதிகம் செலவிடும் நிலையில் சத்தான உணவுகளை தயாரித்து உண்ணலாம். காய்கறிகள், கீரைகள்,பழங்கள்,தானிய வகைகள் போன்ற ஊட்டச்சத்து உணவுகளை தேடி தேடி உட்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து என்பது உடலுக்கு மிக முக்கியம். குறிப்பாக கொரோனா காலத்தில் மிக மிக முக்கியம்.
3.தண்ணீர்.. தண்ணீர்...
உடலுக்கு உணவு எப்படி முக்கியமோ, அதேபோல் நீர் ஆகாரமும் மிக முக்கியம். உடலுக்கு தேவையான தண்ணீரை அவ்வபோது நாம் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். சிலர் வேலைப்பளுவால் எழுந்து செல்ல அலுப்படைந்து தண்ணீரை குடிக்காமல் இருப்பார்கள். சிலர் பரபரப்பான வேலையில் தண்ணீர் குடிப்பதையே மறந்துபோய் இருப்பார்கள். தண்ணீர், பழச்சாறு, நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகள், பழங்கள், இளநீர், மோர் என நீர் ஆகாரமாக எதையாவது குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக இது வெயில்காலம் என்பதால் நீர் ஆகாரம் மிக மிக முக்கியம்.
4.தானியங்கள்:
காய்கறிகள், பழங்கள் மட்டுமல்ல தானிய வகைகளும் ஊட்டச்சத்தில் மிக முக்கிய பங்காற்றுகின்றன. கொண்டைகடலை, நிலக்கடலை, முளைக்கட்டிய பயிறு, பாதாம், பிஸ்தா போன்ற தானிய வகைகளை கண்டுப்பாக உட்கொள்ள வேண்டும். சிற்றுண்டியாக கொண்டைகடலை சுண்டல் சாப்பிடலாம். தினமும் குறிப்பிட்ட அளவு பாதாம் உட்கொள்ளலாம்.
5.உடற்பயிற்சி கட்டாயம்:
ஜிம் இருந்தால் உடற்பயிற்சி என்ற எந்த கட்டாயமும் இல்லை.வீட்டிலேயே இருந்தாலும் ஹோம் வொர்க்கவுட் எனப்படும் வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சியை கண்டிப்பாக செய்ய வேண்டும். உடற்பயிற்சி மட்டுமின்றி, யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவையும் உடல் ஆரோக்கியத்துக்கு மிக மிக முக்கியம். காலை அல்லது மாலையில் உங்களுக்கான நேரத்தை ஒதுக்கிக்கொண்டு உடற்பயிற்சியை கண்டிப்பாக செய்ய வேண்டும். எந்த உபகரணங்களும் இல்லாமல் வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகள் கூட அதிக பலனைத் தருவதால் உடற்பயிற்சியை கட்டாயம் தொடர வேண்டும்.
138 கிலோ எடையிலிருந்து 95 கிலோவாக குறைத்தது எப்படி? ஐ.பி.எஸ் அதிகாரியின் அனுபவங்கள் இதோ உங்களுக்காக!