முதல்வரின் 70வது பிறந்தநாளை கொண்டாட திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு புதுமையான வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளது


தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் மார்ச் 1ஆம் தேதி தனது 70வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களையும் கல்வித் திட்டங்களையும் தொடங்கி வைத்துள்ளார். பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணங்கள், குழந்தைகளுக்கு தொலைநோக்கு கல்வித் திட்டங்கள், கார்ப்பரேட் உலகிற்கு வணிகச் சார்பான முயற்சிகள் உள்ளிட்டவையும் அதில் அடங்கும். 


இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வை நினைவுகூரும் வகையில், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இரண்டு புதுமையான வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 


அதன்படி, கட்சி தொண்டர்கள், தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நலம் விரும்பிகள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.


முதன்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள மு.க.ஸ்டாலின் முதல்வராக கொண்டாடும் 2வது பிறந்தநாள் இதுவாகும்.  


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்:


தி.மு.க. தலைவரான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை விதம் விதமாக கொண்டாடவும், தி.மு.க. அரசின் திட்டங்களை அவரது பிறந்த நாள் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் பல திட்டங்களை தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவான ஐ.டி.பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.


முதல்வருக்கு வாழ்த்து சொல்லனுமா?


அதில் அவர்கள் முன்னெடுத்துள்ள இரண்டு திட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அதாவது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து சொல்ல சிறப்பு எண் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 07127191333 என்ற எண்ணிற்கு அழைப்பு விடுக்கலாம். பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது பிறந்த நாள் வாழ்த்தை பதிவு செய்யலாம்.


இந்த எண் நாளை அதாவது பிப்ரவரி 28-ந் தேதி முதல் வரும் மார்ச் 2-ந் தேதி வரை செயல்படும். இதன்மூலம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோடிக்கணக்கான மக்கள் தங்களது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவிக்க இயலும்.


செல்ஃபி வித் சி.எம்.:


இதற்கு அடுத்தபடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் விதமாக புதிய ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதாவது, www.selfiewithCM.com என்ற இணையதளத்திற்கு உள்ளே சென்று க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் அதில் மெய்நிகர்( virtual) தொழில்நுட்பம் மூலமாக முதலமைச்சருடன் செல்ஃபி எடுத்து மகிழலாம். இந்த செல்ஃபி வித் சி.எம். முறை இளம் தலைமுறையினர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் என்று தி.மு.க.வினர் கருதுகின்றனர்.


இன்றைய தொழில்நுட்பத்தில் பலரும் செல்ஃபி எடுப்பதில் அதிலும் பிரபலங்களுடன் செல்ஃபி எடுப்பதில் ஆர்வமாக உள்ளனர். முதலமைச்சருடன் செல்ஃபி என்றால் சொல்லவே வேண்டாம் என்பதால் லட்சக்கணக்கானோர் செல்ஃபி எடுத்து மகிழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மார்ச் 1-ந் தேதி பிறந்தநாள் கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மேயர். எம்.எல்.ஏ., அமைச்சர். துணை முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்து முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளார். தி.மு.க.விலும் இளைஞரணி செயலாளர், செயல்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து தற்போது தலைவராக உள்ளார். 


மேலும் படிக்க:Exit polls: வெளியானது 3 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிந்தையை கருத்துக்கணிப்பு: யார் எங்கே ஆட்சி?


மேலும் படிக்க: Erode East Bypoll: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ...மொத்த சதவீதம் எவ்வளவு தெரியுமா?