Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு  இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவானது, மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.


அதையடுத்து, 6 மணிக்குள்ளாக வாக்குச்சாவடிக்குள் வந்தவருக்கு டோக்கன் வழங்கப்பட்டு, 6 மணிக்கு மேலாகவும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.


இதில் முதல் முறையாக வாக்களிப்பவர்கள் தொடங்கி முதியவர்கள் வரை அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்தனர். மொத்தம் 238 வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.


வாக்குப்பதிவு நிலவரம்:



  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.10% வாக்குப்பதிவாகி இருந்தது.

  • காலை 11 மணி நிலவரப்படி 27.89% வாக்குப்பதிவானது.

  • நண்பகல் 1 மணி நிலவரப்படி மதியம் 1 மணிவரை 44.56% வாக்குப்பதிவானது.

  • மதியம் 3 மணி நிலவரப்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 59.28% வாக்குப்பதிவானது.

  • மாலை 5 மணி நிலவரப்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 70.58% வாக்குப்பதிவானது. 


6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றதையடுத்து, பதிவான வாக்குகள் குறித்தான விவரங்கள் வெளியாகியுள்ளது. 


இந்நிலையில், இன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் 74.79 சதவிகிதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


கடந்த தேர்தலில், இத்தொகுதியில் 69.58% வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.




ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்


கடந்த ஜனவரி 4 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால்  மரணமடைந்தார். இதனால் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.


இதனையடுத்து, ஜனவரி  31 ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.





இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.,வான தென்னரசுவும், தேமுதிக சார்பில் ஆனந்தும், நாம் தமிழர் சார்பில் மேனகாவும் போட்டியிட்டனர். மொத்தம் சுயேட்சை வேட்பாளர்களை சேர்த்து 77 வேட்பாளர்கள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களம் கண்டனர். 


பதற்றமான வாக்குச்சாவடிகளாக அறியப்பட்ட 34 மையங்களில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.பரப்புரை முதல் வாக்கு நாளான இன்று வரை, சில இடங்களில் பிரச்னையுடன் காணப்பட்ட நிலை இன்றுடன் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் திருவிழா இனிதே முடிவடைந்தது.