மார்ச் மாதம் 20ஆம் தேதி 2023 - 2024 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 


சென்னை தலைமைச் செயலகத்தில்  தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 26 (1)ன்படி மார்ச் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு நிதியமைச்சர்  பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்வார் என தெரிவித்தார். 


மேலும் 2023-24 ஆம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கை மற்றும் 2022-23 ஆம் ஆண்டுக்கான இறுதி கூடுதல் மானியக் கோரிக்கையினையும் நிதியமைச்சர், மார்ச் 28 ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பின்பு அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாட்கள் சட்டமன்றம் நடைபெறும் என்பது தீர்மானிக்கப்படும் என்றும் அப்பாவு கூறியுள்ளார்.


அப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அதில் எந்தவித குழப்பமும் இல்லை என தெரிவித்த சபாநாயகர் அப்பாவு,  சட்டப்பேரவையை பொறுத்தவரை எந்த இருக்கையில் யார் உட்கார வேண்டும் என்பது எனது முழு அதிகாரத்திற்கு உட்பட்டது எனவும் கூறினார். முன்னதாக தமிழ்நாடு அரசின் அமைச்சரவை கூட்டம் மார்ச் 9 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் பட்ஜெட் அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதனிடையே பட்ஜெட்டில் திமுக அரசால் அறிவிக்கப்பட்ட குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதேபோல் வீட்டிற்கு ஒரு தொழில் முனைவோர் உருவாக்கும் வகையில் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதனால் தமிழ்நாடு மக்கள் ஆவலுடன் பட்ஜெட்டை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 


முன்னதாக கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி ஏபிபி நாடு இணையதளத்தில் வெளியான செய்தியில் மார்ச் 20 ஆம் தேதி தமிழ்நாடு அரசின் பட்ஜெட் வெளியாகும் என சரியாக கணிக்கப்பட்டிருந்தது. அதன்படி சபாநாயகர் அப்பாவும் பட்ஜெட் தேதி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.