திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியிருக்கும் மடல் இதோ..
”அண்ணா பிறந்த மண்ணில் பவள விழாவைக் கொள்கைக் கூட்டணியுடன் கொண்டாடுவோம்!
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் பவள விழா அழைப்பு மடல்.
முப்பெரும் விழா எனும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவிழாவை அதன் பவள விழா நிறைவாகக் கடந்த செப்டம்பர் 17-ஆம் நாள் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில், நம் உயிர்நிகர் தலைவராம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தகவல் தொழில்நுட்ப அறிவியலின் கற்பனைக்கெட்டாத புரட்சியான செயற்கை நுண்ணறிவுத் திறன் மூலம் வாழ்த்து தெரிவித்துத் தொடங்கி வைக்க, அவருடைய உடன்பிறப்புகளாம் நாம் அனைவரும் உற்சாக முழக்கம் எழுப்பி, எழுச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்த நிலையில், இந்தப் பேரியக்கத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணாவை நமக்குத் தந்த காஞ்சி மண்ணில் மற்றொரு விழாவுக்கு உடன்பிறப்புகளாம் உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் மிகச் சிறப்பான முறையிலே நந்தனத்தில் பவள விழா நிறைவை நடத்தியபோது, அதில் கழக முன்னோடிகளுக்குப் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் அவர்கள் பெயரிலான விருதுகளுடன், இந்த ஆண்டு முதன்முதலாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ள - உங்களில் ஒருவனான என் பெயரிலான விருதும் காசோலையும் வழங்கிச் சிறப்பிக்கப்பபட்டது. அதுமட்டுமின்றி, கழகப் பணியில் சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளை மண்டலவாரியாகத் தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கினோம். கழகத்தின் பொதுச் செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் ஆகியோர் நம் இலட்சியப் பயணம் குறித்தும், இந்த இயக்கத்திற்காகப் பாடுபட்டு விருதுகளைப் பெற்ற இலட்சிய வீரர்கள் குறித்தும் உரையாற்றினார்கள். அதன் பின் கழகத் தலைவர் என்ற பொறுப்புடன், உங்களில் ஒருவனான நான் பவள விழா சிறப்புரையாற்றினேன்.
பேரறிஞர் அண்ணா எந்த இலட்சியத்திற்காக இந்த இயக்கத்தைத் தொடங்கினாரோ, முத்தமிழறிஞர் கலைஞர் எத்தனை அரும்பாடுபட்டு இந்த இயக்கத்தைக் கட்டிக்காத்தாரோ அந்த இலட்சியத்தை அடைவதற்கும், இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயக நெறிமுகறைகளைக் காப்பதற்கும் தொடர்ந்து தொண்டாற்றி வரும் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் இன்னும் ஒரு நூற்றாண்டு காலத்திற்குத் தன் பயணத்தை வலிவுடன் தொடர்ந்திட நாம் பயணிக்க வேண்டிய பாதையைப் பவளவிழாவில் சுட்டிக்காட்டிப் பேசினேன்.
தமிழ் – தமிழர் - தமிழ்நாடு என்று திராவிட முன்னேற்றக் கழகம் முழக்கத்தை வைத்தபோது, அது குறுகிய கண்ணோட்டம் என்று கருதியவர்கள் உண்டு. ஆனால் இன்று மொழி – இனம் - மாநில உரிமை என்று அந்த முழக்கம் விரிவான பொருளைத் தருவதுடன், தமிழைப் போல இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும், தமிழரைப் போல இந்தியாவில் வாழும் ஒவ்வொரு இனமும், தமிழ்நாட்டைப் போல இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் தங்களின் உரிமைகளை நிலைநாட்டுவதே பன்முகத்தன்மையும் மதநல்லிணக்கமும் கொண்ட ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் என்பதை அனைத்து மாநில மக்களும் உணர்ந்திருக்கிறார்கள். இதுதான் 75 ஆண்டுகால திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்திய அளவிலான தாக்கம்.
இதனை எடுத்துச் சொல்ல ஒரு பவள விழா போதாது. திசையெங்கும் விழா எடுக்க வேண்டும். நம் கழகத்துடன் இணைந்து கொள்கைக் கூட்டணி அமைத்துள்ள இயக்கத்தினரையும் இணைத்து விழா எடுக்க வேண்டும் என்பதால்தான் செப்டம்பர் 28-ஆம் நாள், பேரறிஞர் பெருந்தகை பிறந்த காஞ்சி மண்ணில் பவள விழா கொண்டாடப்படுகிறது. சென்னை நந்தனம் விழா நம் குடும்ப விழா என்பதால் கழகத்தினருக்கு முழுமையான நேரம் ஒதுக்கப்பட்டது. காஞ்சியில் நடப்பது கொள்கை உறவுகளுடனான திருவிழா. இங்கே தோழமைக் கட்சியினர் அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்க இருக்கிறார்கள்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்களும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. க.சுந்தர் எம்.எல்.ஏ., அவர்களும் அண்ணா பிறந்த மண்ணில் பவள விழாப் பொதுக்கூட்டத்திற்குச் சிறப்பான ஏற்பாடுகளை இரவு - பகல் பாராது மேற்கொண்டு வருகிறார்கள். பேரறிஞர் அண்ணாவிடமும் தலைவர் கலைஞரிடமும் கொள்கைப் பாடம் பயின்ற மொழிப்போர்க் கள வீரர் - கழகத்தின் பொதுச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் தலைமையில் நடைபெறுகிற பவள விழாவில் தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் அய்யா கி. வீரமணி அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அவர்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அண்ணன் வைகோ எம்.பி., அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் இரா. முத்தரசன் அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் அவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் தொல். திருமாவளவன் எம்.பி., அவர்கள், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் சகோதரர் கமல்ஹாசன் அவர்கள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் திரு. ஈ.ஆர். ஈஸ்வரன் எம்.எல்.ஏ., அவர்கள், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு. தி. வேல்முருகன் எம்.எல்.ஏ., அவர்கள், நம் கழகத்துடன் தோழமை உறவு கொண்டுள்ள திரு. ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் அவர்கள், திரு. எர்ணாவூர் நாராயணன் அவர்கள், திரு. முருகவேல்ராஜன் அவர்கள், திரு. தமீமுன் அன்சாரி அவர்கள், திரு. அதியமான் அவர்கள், திரு. திருப்பூர் அல்தாப் அவர்கள், திரு. பி.என். அம்மாவாசி அவர்கள் உள்ளிட்டோர் கழகப் பவள விழாக் கூட்டத்தில் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பிக்க இருக்கிறார்கள். உங்களில் ஒருவனான நான் சிறப்புரை ஆற்றவிருக்கிறேன்.
காஞ்சி மண்ணில் நடைபெறும் கழகப் பவள விழா ஏற்பாடுகள் குறித்து ஒவ்வொரு நாளும் தவறாமல் கேட்டறிந்து வருகிறேன். ‘மக்களிடம் செல்’ என்று கழகத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா சொன்னதைக் கட்டளையாக ஏற்று திராவிட மாடல் அரசு மக்களுக்கான பணிகளைத் தொய்வின்றித் தொடர்ந்து வருகிறது. அதனால் அரசு சார்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்வுகள், ஆய்வுப் பணிகள் எனத் தொடர்ச்சியான செயல்பாடுகளுக்கு ஓய்வில்லை.
அமெரிக்காவிற்கு மேற்கொண்ட பயணத்தின் மூலமாகத் தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ள முதலீடுகள் குறித்தும், அதனால் தமிழ்நாட்டில் ஏற்படவிருக்கும் பரவலான தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்தும், அமெரிக்கா வாழ் தமிழர்கள் பொழிந்த அன்பு மழை குறித்தும் அமெரிக்கப் பயணச் சிறகுகள் என்ற தலைப்பில் உடன்பிறப்புகளாம் உங்களுக்கு உங்களில் ஒருவனான நான் கடிதம் எழுதினேன். அந்தப் பயணத்தின் அடுத்த பகுதியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு ஓய்வின்றிப் பணிகள் தொடர்கின்றன. விரைவில் அதனைப் பகிர்ந்து கொள்வேன்.
மாநில உரிமைகளை மறுக்கும் ஒன்றிய அரசுடன் நமக்கான ஒவ்வொரு உரிமைக்காகவும் போராடித்தான் ஆக வேண்டியுள்ளது. போராட்டமே கழகத்தின் வலிமை. ஆட்சியதிகாரம் இருந்தாலும் உரிமைக்கான போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதி கோரி செப்டம்பர் 26, 27 ஆகிய நாட்களில் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டு இந்திய ஒன்றியத்தின் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டுக்கான திட்டங்களை நிறைவேற்றிட ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியை வலியுறுத்திப் பெறவிருக்கிறேன்.
செப்டம்பர் 28-ஆம் தேதி காலையில் ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் உள்ள தொழிற்பேட்டையில் 9 ஆயிரம் கோடி ரூபாயில், 400 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் டாடா மோட்டார் நிறுவனத்தின் ஜாகுவார், லேண்ட்ரோவர் கார் உற்பத்தித் தொழிற்சாலைக்கு டாடா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு. சந்திரசேகரன் அவர்கள் முன்னிலையில் அடிக்கல் நாட்டவிருக்கிறேன்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் திராவிட மாடல் அரசின் கொள்கைகள் இன்று இந்தியா முழுமைக்கும் வழிகாட்டும் வகையில் அமைந்துள்ள நிலையில், ராணிப்பேட்டை நிகழ்வினை முடித்துக்கொண்டு, தமிழ்நாடு என்று நம் மாநிலத்திற்குப் பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணாவின் காஞ்சிக்கு வருகிறேன். நான் மட்டுமல்ல, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளான உங்கள் அனைவரையும் வாஞ்சையோடு அழைக்கிறது காஞ்சி. அண்ணா பிறந்த மண்ணில் அணிவகுப்போம்! கொள்கைத் தோழமைகளுடன் எழுச்சியுடன் கொண்டாடுவோம் கழகத்தின் பவள விழாவை!” என்று குறிப்பிட்டுள்ளார்