தமிழில் 'ஒரு குப்பை கதை', அப்பா, மருது உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ஆதிரா பாண்டிய லட்சுமி. இவர் சென்னையிலுள்ள வளசரவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். சமீபத்தில் இவருடைய வீட்டின் அருகே திமுக பிரமுகர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் பிரச்னை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த 7ஆம் தேதி இவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதன்பின்பும் இவர்கள் வீட்டிற்கு அருகே வந்து பிரச்னை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆதிரா பாண்டிய லட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில்,"என் சொந்த வீட்டிலிருந்து எங்களை விரட்ட தொடர்ச்சியாக ஈடுபடுகிறார்கள். திமுகவின் நல்லாட்சிக்கு களங்கம் விளைவிக்க கட்சிப்பெயரை தவறாக பயன்படுத்தி பல தவறுகளை செய்கிறார்கள். அதில் ஒன்றுதான் இது" எனப் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு உடன் சேர்த்து காவல்துறையில் புகார் அளித்தது தொடர்பான சிஎஸ் ஆர் நகலையும் பதிவிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு ட்விட்டரில் பதிவில்,"நம்மாழ்வார் அக்குப்பஞ்சர் சிகிச்சை மையத்துக்கு வந்த கர்ப்பிணி பெண்ணை "இங்கு வந்தால் கொன்று விடுவேன்!" என்று மிரட்டி அங்கிருந்த பைக்குகளை அவர் மீது தள்ளும் மதுரவாயல் தொகுதி வளசரவாக்கம் திமுக இளைஞர் அணி நபர்கள். அரசின் நடவடிக்கை தேவை" எனப் பதிவிட்டு அவர்கள் மிரட்டுவது தொடர்பான வீடியோவையும் உடன் பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் ஒரு சில இடங்களில் திமுக பிரமுகர்கள் சிலர் இது போன்று பிரச்னைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த நபர்கள் மீது திமுக தலைமையும் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னையில் ஏற்கெனவே அம்மா உணவகம் ஒன்றை சேதப்படுத்திய இரண்டு பிரமுகர்களை திமுக தலைமை உடனடியாக கட்சி பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் என்பதிலிருந்து நீக்கி உத்தரவிட்டது. திமுகவின் இந்த நடவடிக்கையை பலரும் வரவேற்றனர்.
தற்போது மீண்டும் சென்னையில் இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து திமுக அரசு உடனடியாக சட்ட ரீதியிலும் கட்சி ரீதியிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் எண்ணமாக உள்ளது. ”ஒரு பக்கம் திமுக தலைமையிலான ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வரும் சூழலில் மற்றொரு புறம் இதுபோன்ற சில பிரமுகரின் செயல் ஆட்சிக்கு அவப்பெயர் விளைவிக்கும் வகையில் உள்ளது. இது போன்ற செயல்கள் மீண்டும் நடக்காமல் இருக்க திமுக கட்சி சார்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க: Tamil Nadu CoronaVirus Cases | தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று..!