திருவண்ணாமலை புது வாணியகுளத்தெருவைச் சேர்ந்தவர் அண்ணாமலை என்பவரின் மகன் சிவக்குமார் (வயது 50). ஆட்டோ மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு லட்சுமி (வயது 45) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 15 மற்றும் 13 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக சிவக்குமார் மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் சண்டைபோட்டு வந்துள்ளனர்.


லட்சுமிக்கு ஆஸ்துமா, சைனஸ் போன்ற உடல் உபாதைகள் ஏற்கனவே இருந்துள்ளன. இந்நிலையில், கடந்த 1-ஆம் தேதி இரவில் லட்சுமி திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்துவிட்டதாக சிவக்குமார் கூறியுள்ளார். லட்சுமியின் சகோதரிகள் பக்கத்து வீடுகளில் வசித்து வருபவர்கள் அனைவரும் லட்சுமியை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்றைய தினமே லட்சுமி இறந்துவிட்டார். ஆரம்பத்தில் லட்சுமி ஆஸ்துமா நோயால்தான் இறந்தார் என்று எல்லோரும் நம்பினர். ஆனால், பிரேதபரிசோதனை முடிவில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு, எலும்பு முறிவு ஏற்பட்டு இறந்துள்ளார் என்று தெரியவந்தது.



இதனையடுத்து, திருவண்ணாமலை டவுன் போலீசார், சிவக்குமாரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச்சென்று மேலும் விசாரித்தனர். விசாரணையில், சிவக்குமார் பல நாட்களாகவே சிறு சிறு சண்டை போட்டுவந்தோம். இந்நிலையில் அன்று குடிபோதையில் இருந்தேன். அப்போது திடீரென்று லட்சுமி என்னிடம் ஏன் குடித்துவிட்டு வந்தாய் என்று  கேட்டாள். அப்போது நான் தான் எனது மனைவியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டேன்" என்று போலீசாரிடம் சிவக்குமார் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து நேற்று இரவு, சிவக்குமார் கைது செய்யப்பட்டார். மனைவியை கழுத்தை நெரித்து கொன்று விட்டு ஆஸ்துமாவால் அவர் இறந்தார் என்று சிவக்குமார் நாடகமாடிய சம்பவம் லட்சுமியின் குடும்பத்தார் மற்றும் ஊர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.