TN Agri Budget 2023 : வரும் ஆண்டு முதல் 10 லட்சம் குடும்பங்களுக்கு பழச் செடிகள் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் 2023
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று தமிழ்நாட்டின் 2023-2024ம் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதில் மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1000 வழங்குவது, பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை விரிவாக்குவது, சென்னையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மையம் போன்ற பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதைதொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவை அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில், சட்டசபை கூட்டத்தை ஏப்ரல் 21ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையானது தமிழகம் முழுவதும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், வேளாண் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் பல்வேறு வழிகளில் கருத்து கேட்டு உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு கருத்துக்களை கேட்டு உருவாக்கப்பட்டுள்ள பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.
அதில் குறிப்பாக, வரும் ஆண்டு முதல் 10 லட்சம் குடும்பங்களுக்கு பழச் செடிகள் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளதாவது,
பழங்கள், நார்ச்சத்து நிறைந்தவை, இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்துபவை, இதய நோயைக் குறைப்பவை, பக்கவாதத்தைத் தடை செய்பவை, செரிமானப் பிரச்சினையைச் சரிபடுத்துபவை, கண் பார்வையைக் கூர்மையாக்குபவை. ஓர் உணவில், வெண்மை, பசுமை, பழுப்பு நிறமும், சிவப்பு நிறமும், மஞ்சள் நிறமும் சரியான விகிதத்தில் இருப்பதே சமச்சீரான உணவுக்கு அடையாளம். அத்தகைய உணவை வழங்குவதில் கனிகள் பெரும்பங்கு வகிக்கின்றன.
தமிழ்நாடு, உணவு தானியங்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தாலும், ஊட்டச்சத்துப் பாதுகாப்பை அடைய பழங்களின் உற்பத்தி முக்கியம். பருவத்திற்கேற்ப இயற்கை நமக்குத் தேவையான பழங்களை உற்பத்தி செய்து தருகிறது. கோடையில் குளிர்ச்சியான பழங்களையும், குளிர் காலத்தில் உடலை வெப்பத்தில் வைத்திருக்கும் பழங்களையும் தருவித்துத் தருகின்ற அமுதசுரபியாகத் திகழ்கிறது இயற்கை.
எனவே, வரும் ஆண்டில் பத்து லட்சம் குடும்பங்களுக்கு மாங்காய், கொய்யாப் பழம், பலாப்பழம், நெல்லிக்காய், எலுமிச்சை, சீதாப்பழம் போன்ற பழச்செடிகள் அடங்கிய தொகுப்பு ரூ.15 கோடி நிதியில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தும் கிராமங்களில் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும், 300 குடும்பங்களுக்கு இத்தொகுப்புகள் வழங்கப்படும் என்று அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க