தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளதாக  சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளது.


சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் டெங்கு மற்றும் மழைக்கால நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். இந்த மருத்துவ முகாமில் டெங்கு பரிசோதனை மேற்கொண்டு பொதுமக்களுக்கு மருந்து வழங்கப்பட்டது.


குறிப்பாக இந்த நிகழ்ச்சியின் பொழுது டெங்கு மற்றும் மழைக்கால நோய் பரவல்களை தடுப்பது குறித்தும் டெங்கு மற்றும் மழைக்கால நோய் எவ்வாறு பொதுமக்களுக்கு பரவுகிறது என்பதை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டு பொதுமக்கள் விழிப்புடன் செயல்படவும் சென்னை மாநகராட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், ”கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பாதிப்பு இருந்ததால் டெங்கு பாதிப்பின் அளவு அதிகமாக தெரியவில்லை, தற்போது இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்ததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, கொரோனா போன்று டெங்குவும் ஒரு வைரஸ் காய்ச்சல் தான் அதனால் டெங்கு பரவுவதை  கண்டு யாரும் பீதி அடைய வேண்டாம். அதே போல் குடியிருப்பு பகுதிகள், புதிய அடுக்குமாடி கட்டிடம் கட்டும் இடங்கள், மக்கள் பயன் படுத்தும் நீல நிற டிரம்  தொட்டிகள் தான் சவாலாக உள்ளது. அதனால் தான் அதிக அளவில் காய்ச்சல் பரவுகிறது” என அவர் தெரிவித்தார்,


மேலும், "புதிய கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் கொசுக்கள் அதிக அளவு உற்பத்தி ஆகிறது. 3317 பணியாளர்கள் டெங்கு கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காய்ச்சல் ஒரு நாள் அல்லது மூன்று நாட்களுக்கு மேலாக இருந்தால் மருத்துவரை அணுகி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். தானாக யாரும் கடைகளுக்கு சென்று மருந்து வாங்கி சாப்பிட வேண்டாம் எனவும் தெரிவித்தார். இதுவரை இந்தாண்டில் 382 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 80 பேருக்கும், இந்த மாதம் 31 பேருக்கும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.


தொடர்ந்து பேசிய அவர், ”தமிழகத்தில் டெங்கு  காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. அதே போல் சென்னையில் இதுவரை  தெருக்களில் சுற்றி திரிந்த 337 மாடுகள் பிடிபட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு மாடுகளை ஒழிக்க கூடிய அதிகாரம் இல்லை எனவும் முடிந்த வரையில் சாலைகளில் மாடுகள்  சுற்றி திரிவதை கட்டுப்படுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.


தொடர்ந்து, சென்னை அசோக் நகர் உதயா தியேட்டர் அருகில் உள்ள கட்டிடக் கழிவுகளை அகற்றும் பணிகள், நீண்ட நாட்களாக  நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்றும் பணியினை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 


அப்பகுதியில் உள்ள கட்டிடக்கழிவுகளை ஜேசிபி மூலம் மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். குறிப்பாக நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் அங்கு நடைபெறும் தூய்மை பணிகள் குறித்தும் ஆய்வினை ஆணையர் பார்வையிட்டார். 


Udhayanidhi Stalin: மக்களவைத் தொகுதி மறுவரையறை தென் மாநிலங்களுக்கு எதிரான சதித்திட்டம் - அமைச்சர் உதயநிதி எச்சரிக்கை