ஏபிபி குழுமம் நடத்திய ABP Rising Summit 2023 சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்(Udhayanidhi Stalin) பங்கேற்று பேசியதாவது, 


தமிழ்நாட்டின் முன்னேற்றம்:


"ஒரு நல்ல அரசு என்பது உணவு உற்பத்தி, கல்வி, சுகாதாரம் தொழில்துறை ஆகிய அம்சங்களில் சிறந்து விளங்க வேண்டும் என்று சொல்வார்கள். தமிழ்நாடு உணவு, விவசாயம் மற்றும் தொழில்துறையில் நல்ல உயரத்தை எட்டியுள்ளது. சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய மாநிலங்கள் பெரும்பாலானவை ஒரே நிலையில்தான் இருந்தன.


அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான வாய்ப்புகள்தான் இருந்தன. ஆனால், தென்மாநிலங்கள் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாடு இந்தளவு முன்னேறியிருக்கிறது என்றால் அதற்கு இங்கு நிகழ்ந்த புரட்சிதான் காரணம். உழுதவற்கே நிலம் என்ற அடிப்படையில் நில உச்சவரம்பு சட்டத்தை கொண்டு வந்து ஏழை, எளிய மக்களுக்கு நிலங்களை வழங்கியவர் கலைஞர். உணவு பொருட்களை குறைந்த விலைக்கும், கட்டணமின்றி அனைவருக்கும் கொண்டு சேர்த்தது நம் திராவிட முன்னேற்ற கழக அரசு.


உணவு, கல்வி, மருத்துவம்:


இன்று இந்தியாவிலே ஒரு முன்னோடி உணவுக் கொள்முதல் மற்றும் விநியோக அமைப்பாக தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் உள்ளது. தமிழ்நாட்டின் பொது விநியோக முறை என்பது மிகவும் வலிமையானது. தி.மு.க. அரசு கல்விக்கும், மருத்துவத்திற்கும் சமமான முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த மாநிலத்தின் இதயமாக திகழும் கலைஞரின் பெயரில் நூலகம், சென்னையில் பன்னோக்கு மருத்துவமனை இரண்டும் தலா 2 ஆயிரத்து 500 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழ்நாடுதான் ஐ.டி. கொள்கையை இந்தியாவிலே முதன் முதலில் கொண்டு வந்த மாநிலம் ஆகும். கணினி அறிவியலை மையமாக கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நாட்டின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் முதன்மையான மாநிலம் ஆகும்.


 தொகுதி மறுசீரமைப்பு எனும் சதி:


வரவிருக்கும் மக்களவைத் தொகுதிகளின் மறுசீரமைப்பு  பணியின் மூலம் தென் மாநிலங்கள் சிறப்பாக செயல்படுவதற்கு தண்டிக்கும் வகையில் ஒரு பெரிய சதி திட்டம் தீட்டமாக இது பார்க்கப்படுகிறது. 1970களில், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மத்திய அரசு ஊக்குவித்தது. தென்னிந்திய மாநிலங்கள் இந்த நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்தின.


இதனால் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம், அவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்தாத மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. இது தென்னிந்திய மாநிலங்களின் மக்கள்தொகை பங்கை திறம்பட குறைத்தது. இன்று இது நமக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் அனைவரும் அறிவீர்கள், ஒவ்வொரு மாநிலமும் அதன் மக்கள்தொகை விகிதத்தில் இடங்களைப் பெற வேண்டும் என்று அரசியலமைப்பு கட்டளையிடுகிறது, மேலும் தொகுதிகள் மக்கள்தொகைக்கு ஏற்ப இருக்க வேண்டும் என தெரிவித்தார்


ஒவ்வொரு மாநிலமும் அதன் மக்கள்தொகை விகிதத்தில் இடங்களைப் பெற வேண்டும் மற்றும் தொகுதிகள் மக்கள்தொகையின் அளவிற்கு சமமாக இருக்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது.


எல்லை நிர்ணயம்:


மத்திய அரசு 1970களில் மக்கள் தொகையைக் குறைக்க மாநிலங்களைத் தள்ளியது, இந்தக் கொள்கை அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் கைவிடப்பட்டது.  2001ல், இந்தப் பிரச்சினை வந்தபோது, இடங்களை இழக்க வாய்ப்புள்ள மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த எதிர்ப்பின் காரணமாக, அப்போதைய NDA அரசாங்கம் மற்றொரு அரசியலமைப்பு திருத்தத்தை அரசியலமைப்பின் 84 வது திருத்தத்தை, மேலும் 25 ஆண்டுகளுக்கு அதாவது 2026 வரை நீட்டித்தது.


காலக்கெடுவிற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உள்ளன. எனவே, எல்லை நிர்ணயம் நம்மை எவ்வாறு பாதிக்கும்? என்பதை உணர வேண்டும்.


மாநில உரிமைக்கு போராட வேண்டும்:


தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களும் லோக்சபாவில் தங்கள் இடப்பங்கை இழக்கும் என்பது தெளிவாகிறது. மக்களவையின் மொத்த இடங்களின் எண்ணிக்கையை மாற்றாமல் எல்லை நிர்ணயம் செய்தால், தமிழகம் தற்போது 39 இடங்களிலிருந்து 31 இடங்களாக இழக்கும். இது தென் மாநிலங்களின் குரலை அடக்குவதற்கான தெளிவான முயற்சி ஆகும்.


தொகுதி நிர்ணயம் என்பது தலைக்கு மேல் தொங்கும் வாள் என நமது முதலமைச்சர் கூறியுள்ளார். நமது உரிமைகளை பறிக்க நடத்தப்படும் சதியை நாம் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும்.


மாநில உரிமைகளுக்காகப் போராடும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த நடவடிக்கையை எதிர்க்கும் என்று நான் நம்புகிறேன். இந்த நடவடிக்கையை சரியாகச் சிந்திக்கும் ஒவ்வொரு குடிமகனும் எதிர்கொள்வார்கள். மேலும், இந்த மக்கள் இயக்கத்தில் தி.மு.க முன்னணியில் இருக்கும் என்று என்னால் உறுதியளிக்க முடியும்."


இவ்வாறு அவர் பேசினார்.