கொரோனா நிவாரண நிதியாக இதுவரை 186.15 கோடி ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கை கொடுக்கின்ற வகையில், நிதி வழங்க வேண்டுமென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க, நேற்று வரை (28-5-2021) 186.15 கோடி ரூபாய் நன்கொடையாக  பெறப்பட்டுள்ளது. முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள், கொரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதியளித்தவாறு, இதுவரை பெறப்பட்டுள்ள தொகையிலிருந்து, ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காகவும், மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை ரயில் போக்குவரத்து மூலமாக கொண்டு வருவதற்குத் தேவையான கண்டெய்னர்களை வாங்குவதற்காகவும், முதற்கட்டமாக 50 கோடி ரூபாயை வழங்கிட முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். 


இதனையடுத்து, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாள்தோறும் 1.6 இலட்சம் அளவிற்கு மேற்கொள்ளப்பட்டு வருவதைக் கருத்தில்கொண்டு, இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஆர்.டி.பி.சி.ஆர். கிட்களை வாங்குவதற்கு 50 கோடி ரூபாயை இரண்டாவது கட்டமாக வழங்கிட  முதலமைச்சர் ஆணையிட்டிருந்தார்.


தற்போது சிப்காட் நிறுவனம் மூலம், சிங்கப்பூர் மற்றும் பிற அயல்நாடுகளிலிருந்து ஆக்சிஜன் உருளைகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவக் கருவிகளை வாங்குவதற்கு 41.40 கோடி ரூபாயினை முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து  முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் நன்கொடை வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். 10 லட்சம் ரூபாய் மேல் வழங்குபவர்களின் பெயர்கள் பத்திரிகையில் வெளியிடப்படும் என்றும், ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html என்ற இணையதளம் வழியாக நிதியை செலுத்தலாம் என்றும் கூறினார். மேலும், நன்கொடை - செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் என்றும் முதல்வர் கூறினார். இதனைத் தொடர்ந்து பலரும் முதலைமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


https://tamil.abplive.com/news/india/tamil-nadu-morning-breaking-news-lockdown-latest-news-updates-in-tamil-4402/amp


கொரோனா இரண்டாவது அலையால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்புகள் குறைந்து வருகிறது.  கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வந்த நிலையில், சில தினங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருவது ஆறுதலை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் கடந்த 44 நாட்களில் இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பு குறைந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 


தமிழகத்தில் கொரோனா பரவல் 36 ஆயிரத்திற்கும் அதிகமான அளவில் பதிவாகி வந்த நிலையில், முழு ஊரடங்கு காரணமாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கொரோனா பாதிப்பு நேற்று 31 ஆயிரத்து 709 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 9 ஆயிரத்து 700 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 96 ஆயிரத்து 706 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்த சென்னை மாவட்டத்தில் நேற்று கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து 2 ஆயிரத்து 762 பேர் பாதிக்கப்பட்டனர்.